பதங்கள் -பறவைகளின் ஒலி; முகில் ஒத்த -மேகத்தின் ஒலியை ஒத்தனவாக விளங்க;பல் ஞிமிறு -பலவகைப்பட்ட வண்டுகளின்;இசை பன்ன -(ரீங்காரம்) இசைப்பாடலாக ஒலிக்க;மயில் -மயில்கள்;விதங்களின் நடித்திடும் -பல வகைத் தாள அமைப்புகளுடன் நடனம் செய்கின்ற;விகற்ப வழி -வெவ்வேறு வகைப்பட்ட நாட்டிய நிலைகளில்;மேவும் மதங்கியரை ஒத்த -பொருந்திக் கூத்தாடும் மகளிரை ஒத்தன;உழைக்குலம் -மான் கூட்டங்கள்;மழைக்குலம் முழக்க -மேகக் கூட்டங்களின் முழக்கத்தால் (கலக்கமுற்று);வைகு மர மூலத்து -(மயில்கள்) தங்கப்பெற்ற மரங்களின் அடியில்;ஒதுங்கின -ஒதுங்கி நின்றன. பதங்கள் - பறவைப் பொதுப்பெயர். இவ்வடசொல் எழுப்பிச் செல்வ தென்று பொருள்படும். மதங்கியர் - இளம்வயதுடைய நாட்டிய மகளிர், பதங்கத்தின் ஒலி முழவாக, வண்டுகளின் ரீங்காரம் பாட்டாக, மயில்கள் மதங்கியரைப் போல ஆட, மான்கள் அந்த ஆட்டத்தைப் பார்த்தன என்க. உழைக்குலம் மழைக்குலம் என்ற இடத்து இணையெதுகை நயம் காண்க. மழைக்காலத்தில் மயில்கள் மகிழ்ந்து ஆடுவதையும் மான்கள் வருந்தி ஒடுங்குவதையும் இச்செய்யுள் புலப்படுத்துகிறது. 79 | 4227. | விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி, மென் கொம்பு இளைக்கும் இடை மங்கையரும், மைந்தர்களும், ஏற; தளத் தகு மலர்த் தவிசு இகந்து, நகு சந்தின் துளைத் துயில் உவந்து, துயில்வுற்ற, குளிர் தும்பி. |
மென் கொம்பு -மெல்லிய பூங்கொம்பும்;இளைக்கும் - (மென்மையால் ஒப்பாகாது) தோற்கும்;இடை மங்கையரும் -இடையை உடைய இளைய மங்கையரும்;மைந்தர்களும் -ஆடவர்களும்;அகில் புகை -அகிற்கட்டைகளின் புகையானது;விளக்கு ஒளி விழுங்கு - விளக்குகளின் ஒளியை மறைக்கின்ற;அமளி ஏற -கட்டிலில் ஏற;குளிர் தும்பி -குளிரால் வருந்திய வண்டுகள்;தளத்தகு மலர்த்தவிசு இகந்து -இதழ்கள் பொருந்திய சிறந்த தாமரை மலராகிய படுக்கையை விட்டு;நகு சந்தின் -மலர்ந்து விளங்குகின்ற சந்தனமரத்தின்;துளைத்துயில் உவந்து -பொந்துகளில் தங்குதலை விரும்பி;துயில்வுற்ற -(அங்குச் சென்று) உறங்கின. குளிரைப்போக்குவதற்கு இட்ட அகிற்புகை விளக்கின் ஒளியையும் விழுங்குமாறு இருந்ததென அகிற்புகையின் மிகுதி கூறினார். மழைக்காலத்தில் மகளிரும் மைந்தரும், குளிர்தீருமாறு ஊட்டப்பெற்ற அகிற்புகை கமழும் கட்டிலில் ஏறினர் என்க. மழைக்காலத்தில் தாமரை மலர்கள் இதழ் குவிந்தும், நீரில் ஆழ்ந்தும் அழிந்தும் போவதால், அம்மலரில் தங்குதலைவிடுத்து வண்டுகள் கரையிலுள்ள உலர்ந்த சந்தனமரப் பொந்துகளில் விருப்பத்தோடு சென்று இனிது உறங்கலாயின. |