அமையப்பெற்ற;முரம்பினில் -மேட்டு நிலங்களில்;நிரம்பல -(கூட்டமாகத்) தங்க மாட்டாதனவாய்;கரந்து உற -(மழை நீர் தம்மேல்படாதபடி) மறைந்து தங்க;முழைஞ்சிடை நுழைந்த -மலைக்குகைகளில் நுழைந்தன. மழைத் தாரைகள் அம்புகளை ஒத்து விளங்கின என்பதைச் 'சரம்பயில் நெடுந்துளி' என்றறர். 'தண்துளி பளிக்குக்கோல் போல் தாரையாய்ச் சொரிந்து' (சீவக. 508) என்ற அடியைக் காண்க. யானையின் மனவலிமையும் உடல் வலிமையும் 'உரம் பெயர்வு இல் வன் கரி' எனச் சுட்டப்பட்டது. அத்தகைய யானைகளும் தாம் வாழ்ந்த இடங்களை விட்டு ஒடுங்கிக் குகைகளில் நுழைந்தன என்பதால் மழையின் மிகுதியும் குளிரும் உணர்த்தப்பட்டன. பிரசம் - தேன்; இங்குத் தன்கூட்டைக் குறித்தது. உயரத்தில் வந்து எடுப்பவர் இன்மையால் தேன்கூடுகள் பல நாட்களாகக் கற்பாறையாகிய மேட்டு நிலங்களில் கட்டியபடியே அழியாமல் இருந்தனஎன்க. 83 இராமனின் விரகதாபம் | 4231. | இத் தகைய மாரியிடை, துன்னி இருள் எய்த, மைத் தகு மணிக் குறு நகைச் சனகன் மான்மேல் உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை உயிர்ப்பான், வித்தகன், இலக்குவனை முன்னினன், விளம்பும்: |
இத்தகைய மாரியிடை -இத்தன்மை வாய்ந்த மழைக்காலத்தில்;இருள் துன்னி எய்த -இருந்து செறிந்து வந்தடைய;வித்தகன் -அறிவில் சிறந்த இராமன்;மைத்தக மணி -மணி என்று சொல்லத்தக்க கண்ணின் கருமணியையும்;குறுநகை -புன்சிரிப்பையும் உடைய;சனகன் மான்மேல் - சனகன் பெற்ற மகளான மான் போன்ற பார்வையுடைய சீதை மீது;உய்த்த உணர்வத்தினன் -செலுத்திய உணர்வுகளை உடையவனாய்;நெருப்பிடை உயிர்ப்பான் -நெருப்புப் போன்று இடையிடையே பெருமூச்ச விடுபவனாய்; இலக்குவனை முன்னினன் -இலக்குவனை நோக்கி;விளம்பும் -(சில சொற்களைச்) சொல்லலானான். சீதையின் கரிய கண்களின் பார்வையிலும், புன்சிரிப்பின் அழகிலும் இராமனுக்கு உள்ள ஈடுபாடு விளங்க 'மைத்தகு மணிக்குறுநகைச் சனகன் மான்' என்றார். இராமனது பிரிவுத்துன்பத்தை 'உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை உயிர்ப்பான்' என்னும் தொடர்கள் உணர்த்தும். வித்தகன் - அறிவில் சிறந்தவன்; ஈண்டு இராமனைக் குறித்தது. ''பத்துடை அடியவர்க்கு எளியவேன், பிறர்க்கரிய வித்தகன்'' (திருவாய்மொழி - 1 - 3 - 1), 'வித்தகனே இராமாவோ' (பெரியாழ் - 3 - 10 - 6) என்ற அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன; இராமபிரானையே பெரியாழ்வார் 'வித்தகன்' என்று குறித்தார். அக் குறிப்பு கவிச்சக்கரவர்த்தியின் ஆட்சிக்கு வலிமையும் வனப்பும் சேர்க்கின்றது. |