பக்கம் எண் :

கார்காலப் படலம் 397

பொறுத்துக் கொள்பவனாய்;நான் உளனாக -நான் இருக்க;ஆய்வளை -
ஆய்ந்த வளையல்களை அணிந்த சீதை;தோற்றுவாள் அல்லள் -இங்கு
வந்து (நம்முன்) தோன்றுபவள் அல்லள்;இத்துன்பம் ஆர் இனி மாற்றுவார்
-
இத்துன்பத்தை இனி யார் மாற்றுவார்கள்? (எவருமில்லை);துயர்க்கு ஒரு
வரம்பு உண்டாகுமோ -
(யான் அடையும்) துன்பத்திற்கு ஓர் எல்லையும்
உண்டோ?

     இலக்குவன் தேற்றுதலும் இராமன் ஒருவாறு ஆற்றுதலும்
நிகழ்கின்றனவே யன்றிச் சீதையின் தோற்றுதல் நிகழவில்லை.  சீதை வராது
போயின் இராமன் துயர் நீங்கும் வழியும் இல்லையாதலின் இராமன் அடையும்
துயர்க்கு எல்லையும் இல்லை எனவாயிற்று.  'பிணிக்கு மருந்து பிறமன்
அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து' (குறள் - 1102) என்பது ஈண்டு
ஒப்பு நோக்கத்தக்கது.  சீதையைக் கண்டாலன்றி ஆறுதல் மொழிகளால் தன்
துயர் நீங்காது எனத் தெளிவுபடுத்தினான் என்க.  இலக்குவன் தேறுதல் கூறி
இராமன் துன்பத்தைத் தணிவிப்பதைப் பல இடங்களில் காணலாம்.        93

4241. 'விட்ட போர் வாளிகள்
      விரிஞ்சன் விண்ணையும்
சுட்டபோது, இமையவர்
      முதல தொல்லையோர்
பட்டபோது, உலகமும் உயிரும்
     பற்று அறக்
கட்டபோது, அல்லது,
      மயிலைக் காண்டுமோ?

     விட்ட போர் வாளிகள் -(யான் இனி) போரில் தொடுக்கின்ற
அம்புகள்;விரிஞ்சன் விண்ணையும் -பிரமனது சத்திய லோகத்தையும்;
சுட்ட போது (அல்லது) -
எரிப்பதோடல்லாமல்;இமையவர் முதல
தொல்லையோர் -
தேவர்கள் முதலான பழமையானவர்களை;பட்ட போது
(அல்லது)
- ஒழிப்பதோடல்லாமல்;உலகமும் உயிரும் -உலகங்களையும்
உயிர்களையும்;பற்று அறக் கட்டபோது அல்லது -வேரற அழித்துத்தான்;
மயிலைக் காண்டுமோ -
மயில் போன்ற சீதையைக் காண முடியுமோ?

     'விட்ட' என்பது விரைவு பற்றி வந்த காலவழுவமைதி. அல்லது என்பது
கடைநிலை விளக்காய்ச் சுட்டபோதல்லது, பட்ட போதல்லது என இயையும்
சீதையின் மென்சாயல் பற்றி 'மயில்' எனக் கூறினன்.  மயில் - உவமை
ஆகுபெயர்.                                                   94

4242.'தருமம்என்ற ஒரு பொருள்
      தன்னை அஞ்சி, யான்
தெருமருகின்றது; செறுநர்
      தேவரோடு