அல்ல. (முடிந்து விட்டன);கூதிரும் இறுதி உற்றது -கூதிர்ப்பரு வமும் முடிவடைந்தது. களவு செய்தவன் -(சீதையை வஞ்சனையால்) கவர்ந்து சென்ற இராவணனது;உறை காணும் -இருப்பிடத்தைத் தேடிக் காண்பதற்கேற்ற;காலம் வந்து அளவியது -காலம் வந்து சேர்ந்தது. அயர்வது என் -(அங்ஙனமிருக்க) நீ வருந்துவது ஏன்? எண்ணும் நாள் என்றது முன் சீதையைத் தேடுதற்கு ஏற்றதன்று என்று கருதிய மழை நாள்களைக் குறிக்கும். அவை கார்காலமாகிய ஆவணி, புரட்டாசியும், கூதிர்காலமாகிய ஐப்பசி, கார்த்திகையுமாகிய நான்கு மாதங்கள். இராமன் சுக்கிரீவனிடம் 'என்கண் மருவுழி மாரிக்காலம் பின்னுறு முறையின், உன்தன் பெருங்கடல் சேனையோடும் துன்னுதி, போதி' (4131) எனக் கூறியது காண்க. 'உள அல' என்றதும் கூதிரும் இறுதி உற்றது என்றதும் மழைக்காலம் முடிவுறுந தறு வாயில் இருப்பதையே உணர்த்தின. இன்னும் சில நாள்கள் உள்ளன என்பதைக் 'காலம் வந்து அளவியது' என்ற தொடரும் உணர்த்துகிறது. காலம் என்பது மார்கழித் திங்களைக் குறிக்கும். சீதையை வஞ்சித்துக் கவர்ந்தவனாதலின் இராவணனைக் களவு செய்தவன்' என்றான். இராவணனைக் கண்டு பிடித்துச் செயலாற்றும் காலம் வந்துவிட்டதால் இராமன் அயர்வுகொள்ள வேண்டிய நிலை இல்லை என இளவல் ஆறுதல் உரைத்தனன். இராமன் சக்கரவர்த்தித் திருமகனாதலால் 'ஆணை ஆழியாய்' என விளித்தான். எங்கும் செல்லும் இயல்பு பற்றி ஆணையைச் சக்கரம் என்று கூறுதல் மரபாகும். 'உறை' என்பதற்கு வாழ்நாள் என்ற பொருள் இருத்தலால் 'சீதையைக் கவர்ந்த இராவணனுடைய வாழ்நாள் முடிவு காணும் காலம் வந்து நெருங்கியது' என்று பொருள் காணலும் அமையும். 96 | 4244. | 'திரைசெய் அத் திண் கடல், அமிழ்தம் செங் கணான் உரைசெயத் தரினும், அத் தொழில் உவந்திலன்; வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி, தன் குரை மலர்த் தடக் கையால் கடைந்து கொண்டனன். |
திரைசெய் அத்திண்கடல் -அலைகள் வீசுகின்ற அந்த வலிய பாற்கடல்;அமிழ்தம் -தன்னிடமுள்ள அமிழ்தத்தை;செங்கணான் -சிவந்த கண்களையுடைய திருமால்;உரைசெய -(கொடு என்று) சொன்ன அளவிலே; தரினும் -கொடுக்கக் கடவதாயினும்;அத்தொழில் -அங்ஙனம் ஆணையால் எளிதில் பெறுவதை;உவந்திலன் -விரும்பாதவனாய்;வரை முதல் கலப்பைகள் -மந்தரமலை முதலிய கருவிகளை;மாடுநாட்டி - அக்கடலிடத்து நாட்டி;தன் குரை மலர்த் தடக்கையால் -(தோள் வளை முதலிய) அணிகலன்கள் ஒலிக்கப் பெற்ற செந்தாமரை மலர்போன்ற பெரிய கைகளால்;கடைந்து கொண்டனன் -(அக்கடலைக்) கடந்தே அமிழ்தத்தைப் பெற்றுக் கொண்டான். |