கோபம் இல்லாமை மட்டுமன்றி, அதற்குரிய தன்மையும் இவர்கள்மாட்டு இல்லாமையால் ''கதமெனும் பொருண்மையிலர்'' என்றான். தோற்றப்பொலிவில் இந்திரனைவிட, நல்லொழுக்கத்தில் அறக்கடவுளைவிட, வடிவழகில் மன்மதனைவிட, ஆற்றலில் யமனைவிட இராமலக்குவர் மேம்பாட்டு விளங்கினர் என அனுமன் உணர்ந்தான். கருணை மிகுதியை உணர்த்தவே 'கருணையின் கடல் அனையர்' என நினைந்தான். சதமகன் என்பது சதமன் என மருவியது; நூறு யாகங்களைச் செய்தவன் ஆதலின் இந்திரன் சதமகன் எனப்பட்டான். (சதம் - நூறு; மகம் - யாகம்) மதனன் - களிப்பை உண்டாக்குபவன்; மறல் - கொடுமை, அதை உடையவன் மறலி. 8 அனுமன் இவர்களே தருமம் என்று துணிதல். அறுசீர் ஆசிரிய விருத்தம் | 3759. | என்பன பலவும் எண்ணி, இருவரை எய்த நோக்கி, அன்பினன், உருகுகின்ற உள்ளத்தன், ஆர்வத்தோரை முன்பிரிந்து, அனையர்தம்மை முன்னினான் என்ன நின்றான் - தன் பெருங்குணத்தால் தன்னைத் தான்அலது ஒப்பு இலாதான். |
தன் பெருங்குணத்தால்-தனது சிறந்த குணங்களால்; தன்னைத் தான் அலது -தனக்குத்தானே ஒப்பாவதன்றி;ஒப்பு இலாதான் -வேறு ஒப்புமை இல்லாதவனாகிய அனுமன்;என்பன பலவும் எண்ணி- மேற்கூறியவாறு பலவற்றையும் எண்ணி;இருவரை எய்த நோக்கி -அவ்விருவரையும் உற்றுப்பார்த்து;அன்பினன் உருகுகின்ற -அன்பால் உருகுகின்ற; உள்ளத்தன் -உள்ளம் கொண்டவனாய்;ஆர்வத்தோரை - அன்புடையவர்களை;முன் பிரிந்து - முன்னர் ஒரு காலத்தில் விட்டுப்பிரிந்து; அனையர்தம்மை -அவர்களை;முன்னினான் என்ன -மீண்டும் எதிர்ப்பட்டான் போல;நின்றான் - (அன்பு கொண்டு) நின்றான். முன்பு ஒருகாலும் காணாத இராமலக்குவர் அனுமனுக்கு முன்னரே பழகியவர் போலவே காணப்பட்டதால் 'ஆர்வத்தோரை முன்பிரிந்து அனையர் தம்மை முன்னினான் என்ன' என்றார். வீடணன் இராமனைக் காண நினைத்த போதே, 'முன்புறக் கண்டிலேன், கேள்வி முன்பிலேன், அன்புறக் காரணம் அறியகிற்றிலேன், என்புறக் குளிரும் நெஞ்சுருகும்' என்று உருகியதைக் காணலாம். (6384) தன்னில் தான் அலது ஒப்பிலாதான் என்றது பொது நீங்குவமை. அனுமன் தனக்கு உவமை இல்லாதவன் என்பது பெறப்பட்டது. ''தன்னலது ஒரு பொருள் தனக்கு மேலிலான்'' (3626) என இராமனும் கூறப்பட்டிருத்தல் காண்க. 9 |