பக்கம் எண் :

400கிட்கிந்தா காண்டம்

     திருமால் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் பாற்கடலிடத்து எளிதில்
அமிழ்தத்தைப் பெறலாம்; எனினும் அங்ஙனம் பெறாது.  மத்து முதலிய
கருவிகளைக் கொண்டு தன் கையால் கடைந்தே அமிழ்தத்தைப் பெற்றான்.
அதுபோன்றே இராமன் நினைத்தால் வேறொருவர் துணையின்றியே உலகையும்
உயிர்களையும் அழித்துப் பிராட்டியைக் காணும் ஆற்றல் பெற்றவன்; எனினும்
வானரப்படைகளின் துணை கொண்டு தேடி முயன்று பகைவரை வென்று
சீதையைக் காண்பதே முறையானது என்று இலக்குவன் உரைத்தான்.
இச்செய்யுள் பிறிது மொழிதலணி.  திருமால் பாற்கடல் கடைந்ததை
''வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல் வண்ணன்
பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே' (சிலப் - ஆய்ச்சி.32) என்ற
அடிகளும் உணர்த்தும்.  'பூவிற்குத் தாமரையே' (திருவள்ளுவ மாலை. 38)
'பூவினிற் கருங்கலம் பொங்கு தாமரை' (தேவா. 1182. 2) என்றாராகலின் மலர்
இங்கே தாமரையைக் குறித்து நின்றது.  அ - பண்டறிசுட்டு.  தேவரும்
அரக்கரும் பல காலம் கடைந்த கடலாதலின் 'திண்கடல்' எனப்பட்டது.  வரை
முதல் கலப்பைகள் - மந்தரமலை, வாசுகி, மேரு முதலியன.  செங்கணான் -
சிவந்த வரிகள் படர்ந்த கண்களை உடையவன்.  இங்கே திருமாலைக்
குறித்தது.  'கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனை'
என்கிறது சிலப்பதிகாரம் (ஆய்ச்சி. 36) குரைத்தல் - ஒலித்தல் - கடகம்,
வாகுவலயம் போன்ற அணிகள் ஒலிக்கப்பெறல்; வருந்திக் கடைதற்குப்
பொருந்தாத மென்மையான கை என்பதை மலர்க்கை' என்ற தொடர்
உணர்த்திற்கு.  எத்துணை ஆற்றலுடையராயினும் ஒரு செயலைத் திறம்படப்
புரியக் காலமும் கருவியும் இன்றியமையாதன என்பது இப்பாடலில்
உணர்த்தப்பட்டது.  'ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால்
செயின்' (குறள் - 484) என்றதுகாண்க.                            97

4245.'மனத்தினின் உலகு எலாம்
      வகுத்து, வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும்,
      நேமியோன் நெடும்
எனைப் பல படைக்கலம்
      ஏந்தி, யாரையும்,
வினைப் பெருஞ் சூழ்ச்சியின்
      பொருது வெல்லுமால்.

     நேமியோன் -(மற்றும்) அத்திருமால்;மனத்தினின் -திருவுள் ளத்தில்
நினைத்த மாத்திரத்தில்;உலகு எலாம் வகுத்து -உலகங்களை எல்லாம்
படைத்து; வாய்ப் பெயும் -வாயில் போட்டு உண்ணத்தக்க;நினைப்பினன்
ஆயினும் -
சங்கற்ப வலிமை உடையவனாயினும்;எனைப்பல நெடும்
படைக்கலம் ஏந்தி -
(அங்ஙனம் செய்யாமல்) வேறு பல பெரிய
ஆயுதங்களைக் கையிற் கொண்டு;யாரையும் -(கொடிய வர்கள்)
அனைவரையும்;வினைப் பெரும் சூழ்ச்சியின் -போர்த் தொழிலுக்குரிய
சூழ்ச்சிகளோடு;பொருது வெல்லும் -போர் செய்தே வெற்றி கொள்வான்.

     தான் பரமபதத்தில் அல்லது பாற்கடலில் இருந்தவாறே தன் மனத்தால்
நினைத்த அளவில் சங்கற்ப மாத்திரையில் - அனைவரையும்
அழிக்கவல்லவனாயினும், திருமால் அங்ஙனம் செய்யாது பல
படைக்கருவிகளைக் கொண்டு