விரிந்த சிறகுகளைப் பந்தலாகப் பரப்பி, எயில் வகுத்து -மதில் போலச் சுற்றிலும் வளைத்துக்கொண்டு;எய்துகின்ற -தொடர்ந்து வருகின்றன; இனமுகில் கணங்கள்-இனமாகிய மேகக் கூட்டங்கள்;எங்கும் பயில்வுற - எல்லா இடங்களிலும் நெருக்கமாக;திவலை சிந்தி -நீர்த்துளிகளைச் சிந்திக்கொண்டு;பாங்கர் -இவர்கள் பக்கத்தில்;பயப்பயத்தழுவும்-மெல்ல மெல்லத் தொடர்ந்து வருகின்றன; மயில் முதலிய பறவைகள் நிழல் செய்ய, மேகங்கள் நீர்த்துளிகளைச் சிந்தி வெப்பம் தாக்காது இருவரையும் காக்க முயன்றன. இராமன் நிறத்திற்கு நீலமணியும், இலக்குவன் நிறத்திற்கு மாணிக்க மணியும் உவமையாகக் கொள்ளலாம். உயர்ந்தோர்க்குப் பறவைகள் இங்ஙனம், சிறை விரித்து நிழல் செய்யும் என்பதை ''ஆஅயெயினன் --- மயங்கமர் வீழ்ந்தென--- ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி நிழல் செய்து' (அகம். 208-5-12) என்பதால் அறியலாம். முகிற்கூட்டங்கள் நீர்த்துளிகளைச் சிந்திச் செல்வதைப் 'பனிபுரை துளிமேகம் புயல்தர. . . வழியினியன போனார்' (2000) என்பதில் காண்க. பந்தர், பாங்கர் - போலிகள். பையப் பைய என்பன பயப்பய எனப் போலியாய் அடுக்கின. 11 | 3762. | 'காய் எரி கனலும் கற்கள், கள்ளுடை மலர்களேபோல், தூய செங் கமல பாதம் தோய்தொறும், குழைந்து தோன்றும்; போயின திசைகள்தொறும், மரனொடு புல்லும் எல்லாம் சாய்வுறும், தொழுவபோல்; இங்கு, இவர்களோ தருமம் ஆவார்? |
காய்எரி கனலும் கற்கள் -சுடும் நெருப்புப்போல வருத்துகின்ற பரற்கற்கள்;தூய செங்கமல பாதம் -தூய்மையான (இவர்களது) செந்தாமரை மலர் போன்ற திருவடிகள்;தோய்தொறும் -படும்போ தெல்லாம்;கள்ளுடை மலர்களே போல் -தேன் பொருந்திய புதிய மலர்களைப் போல;குழைந்து தோன்றும் -மென்மையாகக் குழைந்து விளங்குகின்றன;போயின திசைகள் தோறும் -(இவர்கள்) சென்ற இடங்களில் எல்லாம்;மரனொடு புல்லும் எல்லாம் -மரங்களோடு புல் முதலிய யாவும்;தொழுவபோல்-(இவர்களை) வணங்குவன போல;சாய்வுறும் -சாய்ந்து நிற்கின்றன;இங்கு -இதனால்; தருமம் ஆவார் -தருமதேவதைகள் ஆவார்;இவர்களோ -இவர்கள் தாமோ? இவர்களின் திருவடிகள் பட்டமாத்திரத்தில் சுடுகின்ற பரற்கற்கள் மென்மையாகின்றன; இவர்களைக் கண்டபோது ஓரறிவுடைய மரமும் புல்லும் வணங்குகின்றன என்று இவர்களின் கடவுள் தன்மையைக் குறித்து அனுமன் வியந்தான். மரமும் புல்லும் சாய்வுறும் தொழுவபோல் என்றது தற்குறிப்பேற்ற அணியாம். ''மரங்கள் நின்று மதுத்தாரைகள் பாயும், மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும், இரங்கும் கூம்பும் திருமால் நின்ற பக்கம் நோக்கி அவை |