| பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான். |
அன்ன தோன்றலும் -அந்த அங்கதனும்;ஆண்தொழிலான் - வீரமிக்க செயல் செய்யக்கூடிய இலக்குவன்;வரவு இன்னதென்று அறிவான் - வந்த நோக்கம் இன்னதென்று அறியும் பொருட்டு;மருங்கு எய்தினான் - அவ்இலக்குவன் அறியாமல் ஒரு புறமாகப் பக்கத்தில் சென்று;மன்னன் மைந்தன் -தசரத மன்னனின் மகனான இலக்குவனது;மனக்கருத்து உட்கொளா -மனத்தின் கருத்தை (அவனது முகக்குறிப்பால்) அறிந்து; பொன்னின் வார்கழல் தாதை -(பொன்னாலான நெடிய வீரக்கழலையுடைய தன் சிறிய தந்தையாகிய சுக்கிரீவனது;இல் போயினான் -அரண்மனைக்குச் சென்றான். தாதையில் - ஒரு சொல்லாகக் கொண்டு சிறிய தந்தையிடம் என்றும் பொருள் உரைக்கலாம். இலக்குவனது கோபத்தை அவனது முகக் குறிப்புக் கொண்டே அங்கதன் அறிந்தான் என்பது மருங்கு சென்று என்ற தொடர் இலக்குவன் அங்கதனிடம் பேசினான் என்ற வான்மீகத்தை அடியொற்றிப் பிறந்ததாகும். ஆனால், கம்பன் இவர்களிடையே பேச்சு நடைபெற்றதாகக் கூறவில்லை. அதனால் அங்கதன் மறைவாக இலக்குவன் முகக்குறிப்பைக் காணும் அளவிற்கு அவன் பக்கத்தே சென்றான் என்று பொருள் கூறப்பட்டது. 'நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்பது திருக்குறள் (குறள் 706) அறிவான் - வானீற்று வினையெச்சம். 17 சுக்கிரீவனது நிலை 4286. | நளன் இயற்றிய நாயகக் கோயிலுள், தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குரல் இள முலைச்சியர் ஏந்து அடி தைவர, விளை துயிற்கு விருந்து விரும்புவான். |
நளன் இயற்றிய -வானர வீரனாகிய நளனால் உருவாக்கப் பட்ட; நாயகக் கோயிலுள் -சிறந்த அரண்மனைக்குள்ளே;தளமலர் தகைப்பள்ளியில் -இதழ் நிறைந்த மலர்களைப்பரப்பி அமைக்கப்பட்ட அழகிய படுக்கையில்;தாழ்குழல் இள முலைச்சியர் -நீண்ட கூந்தலை யும் இளமையான முலைகளையும் உடைய மகளிர்;ஏந்து அடி தைவர -சிறந்த (தன்) கால்களை வருடிப்பிடிக்க;விளை துயிற்கு -உண்டாகும் தூக்கத்திற்கு; விருந்து விரும்புவான் -(தான்) விருந்தாவதை விரும்புவனும். புதிதாக ஆட்சியைப் பெற்று அந்தப்புரத்திலே மகளிர் பலர் தன் அடி களை வருட இனிய தூக்கத்தை மேற்கொண்டுள்ளான் சுக்கிரீவன் என்பது. நளன் - தேவ சிற்பியான விசுவகர்மாவின் மகன். ஏந்து அடி - மடியில் வைத்துக் கொண்டுள்ள பாதங்கள் என்றும் உரைக்கலாம். தூங்குவதற்குத் தைவரல் முதலியன துணையாய் இன்பம் பயப்பன. ஆதலால், அவற்றைத் துயிலுக்கு விருந்தென்றார். இதுமுதல் ஐந்து பாடல்கள் குளகச் செய்யுள்கள். விரும்புவான், |