பக்கம் எண் :

44கிட்கிந்தா காண்டம்

அனுமன் எதிர் சென்று வரவேற்றலும்'நீ யார்' என இராமன் வினாவுதலும்

3764. இவ் வகை எண்ணி, ஆண்டு,
     அவ் இருவரும் எய்தலோடும்,
செவ் வழி உள்ளத்தானும், தெரிவுற
     எதிர் சென்று எய்தி,
'கவ்வை இன்றாக, நுங்கள்
     வரவு! ' என, கருணையோனும்,
'எவ் வழி நீங்கியோய்? நீ யார்'
     என, விளம்பலுற்றான்:

     இவ்வகை எண்ணி -இவ்வாறு ஆலோசித்து;செவ்வழி உள்ளத்
தானும் -
செம்மை பொருந்திய மனமுடையவனாகிய அனுமனும்;ஆண்டு -
அவ்விடத்தில்;அவ்இருவர் எய்தலோம் - அவ்விரண்டு பேரும் வந்த
அளவில்;தெரிவுற எதிர்சென்று எய்தி -அவர்களுக்குத் தெரியுமாறு
எதிரில்சென்று அடைந்து;நுங்கள் வரவு- ''உங்கள் வருகை;கவ்வை
இன்றாகஎன
- துன்பம் இல்லாதது ஆகுக'' என வரவேற்க;
கருணையோனும் -அருள் உடையவனாகிய இராமனும்;எவ்வழி
நீங்கியோய்? -
நீஎவ்விடத்திலிருந்து வருகின்றாய்?யார் நீ - நீ யார்
என விளம்பலுற்றான் -என்று வினவ (அனுமன்) சொல்லத் தொடங்கினான்.

     முன்பு மறைய நின்று இராமலக்குவரின் இயல்புகளை ஆராய்ந்து
அறிந்தவனாதலால், அவர்கள் தானிருக்கும் இடத்தை அடைந்தபோது மறைந்து
நில்லாமல் அவர்கள் காண எதிரில் சென்றான் என்பதால் 'தெரிவுற எதிர்
சென்று எய்தி' என்றார்.  அனுமன் நேர்வழியில் செல்பவன் ஆதலால்
'செவ்வழி உள்ளத்தான்' எனப்பட்டான்.  பின் இதே படலத்தில் சுக்கிரீவனைச்
செவ்வழி உள்ளத்தான் என இராமன் குறிக்கிறான் (3770).  இராமன்
வருகையால் துன்பம் ஏற்படும் என்று சுக்கிரீவன் முதலியோர் கருதியதால்
'கவ்வை இன்றாக நுங்கள் வரவு' என அனுமன் வரவேற்றான்.  ''தீதுஇல்
வரவுஆக திரு! நின் வரவு'' (2769) என இராமன் சூர்ப்பணகையிடம் கூறியதை
ஒப்புநோக்கலாம்.  புதிதாக வருபவரை இங்ஙனம் கூறி வரவேற்றல் இயல்பு.
கருணையோன் என்றது இராமனை.                             14

அனுமன் விடை

3765.'மஞ்சு எனத் திரண்ட கோல
     மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர்
     இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய
     கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும்
     அனுமன் என்பேன்;