பக்கம் எண் :

அனுமப் படலம்45

     மஞ்சு எனத்திரண்ட- மேகம் போல நீலநிறமுடையதாய்த் திரண்டு
அமைந்த;கோல மேனிய -அழகிய மேனியை உடையவனே!;மகளிர்க்கு
எல்லாம் -
பெண்கள் யாவர்க்கும்;நஞ்சு எனத்தகைய ஆகி- நஞ்சு என்று
சொல்லத்தக்க தன்மையை உடையனவாகி;நளிர் இரும் பனிக்கு -குளிர்ச்சி
மிக்க பனிக்கு;தேம்பாக் கஞ்சம் ஒத்து - வாடாத தாமரை மலர்களுக்கு
ஒப்பாக;அலர்ந்த -மலர்ந்து விளங்குகின்ற;செய்ய கண்ண -சிவந்த
கண்களை உடையவனே!;யான் -யான்;காற்றில் வேந்தற்கு -
வாயுதேவனுக்கு;அஞ்சனை வயிற்றில் -அஞ்சனாதேவியின் வயிற்றில்;
வந்தேன் -
பிறந்தேன்;நாமமும் - என் பெயரும்;அனுமன் என்பேன் -
அனுமன் என்று அழைக்கப்பெறுவேன்.

     நீலமேகம் நிறத்தாலும், குளிர்ச்சியாலும், அழகாலும் இராமன் மேனிக்கு
உவமையாயிற்று.  தன்னைக் காணும் மகளிர்க்கு இன்பம் அளிக்காமல்
காமநோயை உண்டாக்கி வருத்துவதால் 'நஞ்சு எனத் தகைய ஆகி'
எனப்பட்டது.  ''ஏழையர் ஆவியுண்ணும் இணைக்கூற்றம் கொல்லோ
அறியேன்.  அழியங் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்''
(திருவாய்மொழி 7.7) என்பது ஒப்புநோக்கத்தக்கது.  பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் இராமன் கண்களுக்கு இல்பொருள் உவமை.  இராமனின் அழகிய
மேனியிலும், சிவந்த கண்களிலும் அனுமன் ஈடுபாடு கொண்டதைக்
'கோலமேனிய,' செய்யகண்ண' என்னும் தொடர்கள்உணர்த்தும்.         15

3766.'இம்மலை இருந்து வாழும்
     எரி கதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்;
     தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் ஊற்று அனையன் ஏவ,
     வினவிய வந்தேன்' என்றான்
எம் மலைக் குலமும் தாழ,
     இசை சுமந்து, எழுந்த தோளான்.

     எம்மலைக் குலமும் -எந்த மலைக்கூட்டமும்;தாழ- தாழ் வுறும்படி;
இசை சுமந்து -
புகழைச் சுமந்து கொண்டு;எழுந்த தோளான் -உயர்ந்த
தோள்களை உடையவனாகிய அனுமன்;இம்மலை இருந்து வாழும் -''இந்த
ருசிய முகம் என்னும் மலையில் தங்கியிருந்து வாழ்ந்து வரும்;எரிகதிர்ப்
பரிதிச் செல்வன் -
எரிகின்ற ஒளிக்கதிர்களை உடைய சூரிய தேவனின்
மகனாகிய;செம்மலுக்கு - தலைவனாகிய சுக்கிரீவனுக்கு;ஏவல்செய்வேன் -
ஏவிய பணிகளைச் செய்பவனாவேன்;தேவ நும்வரவு நோக்கி-நும்முடைய
வருகையைப் பார்த்து;விம்மல் உற்று - உள்ளப்பூரிப்பு அடைந்து;
அனையன் -
அந்தச் சுக்கிரீவன்;ஏவ - (உங்களை யாரென்று அறிந்து
வருமாறு) ஏவியதால்;வினவிய வந்தேன் -விசாரித்து அறிந்து செல்ல
வந்தேன்'';என்றான் - என்றான்.