பக்கம் எண் :

450கிட்கிந்தா காண்டம்

முதலானோரும்;அதனைச் செவ்வே பூண்டு நின்று -அப் பணியை
நல்ல முறையில் ஏற்றுக் கொண்டு செம்மையாகச் செய்து;உய்தற் பாலார் -
ஈடேறக் கடமைப்பட்டவராவார்.

     உங்களுக்குச் சீதையுள்ள இடத்தைத் தேடியறியத் துணை
வேண்டுமெயல்லாமல் பகை வெல்லத் துணை தேவையில்லை.  ஆகவே, அப்
பணியைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டவர் சுக்கிரீவன் முதலியோரே
என்றாள் தாரை.  தேண்டுவார் - தேடுதல் விரித்தல்விகாரம்.           59

இலக்குவன்பால் அனுமன் வருதல்

4328. என்று அவள் உரைத்த மாற்றம்
     யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன்,
      அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்; நிற்றலொடும், 'நீத்தனன்
      முனிவு' என்று உன்னி,
வன் துணை வயிரத் திண்
     தோள் மாருதி மருங்கின் வந்தான்.

     என்று அவள் உரைத்த -இவ்வாறு அத்தாரை சொன்ன;மாற்றம்
யாவையும் -
வார்த்தைகளையெல்லாம்;இனிது கேட்டு -கவனமாகக் கேட்டு;
நன்று உணர் -
தெளிவாக உணர்ந்த;கேள்வியாளன் -(வேதக்)
கேள்வியறிவுடைய இலக்குவன்;அருள்வர -கருணை மேலிட;நாண்
உள்கொண்டான் நின்றனன் -
வெட்கத்தை மனத்தில் கொண்டவனாய்
நின்றான்;நிற்றலோடும் 'முனிவு நீத்தனன்' - (அவ்வாறு) நின்ற அளவில்
'இவன் கோபத்தை நீக்கிவிட்டான்';என்று உன்னா -என்று கருதி;
வன்துணை -
வலிய போர்த்துணையாகவுள்ள;வயிரத் திண் தோள் மாருதி
-
உறுதியும் பலமும் கொண்ட தோள்களையுடைய அனுமன்;மருங்கின் -
(இலக்குவன்) அருகிலே;வந்தான் -வந்து சேர்ந்தான்.

     மாற்றம் -சொல்                                           60

இலக்குவன் வினாவும் அனுமன் விடையும்

4329. வந்து அடி வணங்கி நின்ற
      மாருதி வதனம் நோக்கி,
'அந்தம் இல் கேள்வி நீயும்
      அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை?' என்றான்.
      முனிவினும் முளைக்கும் அன்பான்;
'எந்தை கேட்டு அருளுக!' என்ன
      இயம்பினன், இயம்ப வல்லான்: