பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 451

     முனிவினும் முளைக்கும் அன்பான் -கோபப்பட்ட நிலையிலும் அன்பு
தோன்றும் இயல்பு கொண்ட இலக்குவன்;வந்து அடிவணங்கி நின்ற -
அருகிலே வந்து தன் திருவடிகளை வணங்கி நின்ற;மாருதி வதனம் -
அனுமனின் முகத்தை;நோக்கி -பார்த்து;அந்தம் இல் கேள்வி -
அளவில்லாத கேள்வி ஞானமுடைய;நீயும் -நீயும்;முந்தின செய்கை -
முன்பு நடந்தவற்றை;அயர்த்தனை அன்றோ -மறந்துவிட்டாயல்லவா;
என்றான் -
என்று கேட்டான்;இயம்ப வல்லான் -(அது கேட்டு) சொல்லின்
செல்வனான அனுமன்;எந்தை -எம் தலைவனே;கேட்டு அருளுக
என்னா-
(நான் சொல்வதைக்) கேட்டருளுக என்று சொல்லி;இயம்பினன் -
(மேலும்)கூறலானான்.

     முந்தின செய்கை - மழைக் காலம் கழிந்தவுடன் சுக்கிரீவன்
சேனையோடு இராமனுக்கு உதவ வரவேண்டும் என்பது.                  61

4330.'சிதைவு அகல் காதல் தாயை,
      தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை,
      பாலரை, பாவைமாரை,
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
      ஆம் ஆற்றல்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
      ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?'

     சிதைவு அகல் -கேடு நீங்கிய;காதல் தாயை -அன்புடைய
தாயையும்;தந்தையை, குருவை -தந்தையையும் குருவையும்;தெய்வப்
பதவி அந்தணரை -
தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும்;ஆவை,
பாலரை -
பசுக்களையும் குழந்தைகளையும்;பாவைமாரை -மகளிரையும்;
வதை புரிகுநர்க்கும் -
கொலை செய்தவர்களுக்கும்;மாற்றலாம் ஆற்றல் -
(அந்தப் பாவங்களை) நீக்குவதற்குரிய வழிகள்;உண்டாம் -உள்ளதாம்;
மாயா உதவி -
(ஆனால்) அழியாத பேருதவியை;கொன்றார்க்கு -
மறந்தவர்களுக்கோ;ஒழிக்கலாம் உபாயம் -(அப் பாவத்தைப்)
போக்குவதற்குரிய வழி;ஒன்றானும்  உண்டோ -ஒன்றாவது உண்டோ?
(இல்லை).

     தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக்
கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும்.  இருப்பினும் அப்பாவங்களைப்
போக்குவதற்குரிய கழுவாய் உண்டு.  ஆனால், செந்நன்றி மறத்தலுக்கோ
அத்தகைய கழுவாய் இல்லை என்பதாம்.  'எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்றை மகற்கு' (குறள் 110).
'ஒருவன், செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென அறம் பாடிற்றே' (புறம் 34)
என்ற வாக்குகளை ஒப்பிடுக.  மாயா உதவி - பயனழியாத உபகாரம், மறக்கத்
தகாத நன்றி.                                                  62

4331.'ஐய! நும்மோடும், எங்கள்அரிக்
      குலத்து அரசனோடும்,