| | மெய் உறு கேண்மை ஆகி, மேலை நாள் விளைவது ஆன செய்கை, என் செய்கை அன்றோ? அன்னது சிதையும் ஆயின், உய் வகை எவர்க்கும் உண்டோ? உணர்வு மாசுண்டது அன்றோ?' |
ஐய -ஐயாவே; நும்மோடும் -உங்களுக்கும்;எங்கள் அரிக் குலத்து அரசனோடும் -வானரக் கூட்டமாகிய எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கும்; மெய் உறு கேண்மை -(ஒருவரோடு ஒருவர்க்கு) உண்மையான நட்பு; ஆக-உண்டாகும்படி;மேலைநாள் விளைவதாய -முன்னாளில் உண்டான; செய்கை என் செய்கை அன்றோ -செயல் எனது செயல் அல்லவா? அன்னது -அந்த நட்புத் தருமம்;சிதையுமா யின் -அழியுமானால்; உய்வகை எவர்க்கும் உண்டோ? -(அத் தீவினை யிலிருந்து) தப்பும் வழி இந்த உலகில் யாருக்குத்தான் உண்டு (இல்லை);உணர்வு -(அதுவல்லாமல்) எங்கள் அறிவு யாவும்;மாசுண்டது அன்றோ -குற்றம் உடையதாகும் அல்லவா? உங்கள் உதவியைப் பெற்ற நாங்கள் அறிவு கெட்டு இழிவுடைவதா என்றான் அனுமன். மேலைநாள்: முன்னாள். 63 | 4332. | 'தேவரும், தவமும், செய்யும் நல் அறத் திறமும், மற்றும் யாவையும், நீரே என்பது, என்வயின் கிடந்தது; எந்தாய்! ஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ? அருள் உண்டு அன்றே மூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர்! - முனிவு உண்டானால்?' |
எந்தாய் -எம் தலைவனே!தவமும் -(முற்பிறப்பிலும் இப் பிறப்பிலும் நாங்கள் செய்த) தவமும்;செய்யும் நல்லறத் திறமும் -(நாங்கள்) செய்த சிறந்த தருமச் செயல்களும்;தேவரும் மற்றும் யாவை யும் -தேவர்களுள் மற்றுள்ள பொருள்களும்;நீரே என்பது -(எங் களுக்கு) நீங்களே என்னும் கருத்து;என்வயின் கிடந்தது -என்னிடம் பதிந்துள்ளது;ஆவது நிற்க - அது அப்படியே இருக்கட்டும்;மூவகை உலகும் -மூன்று வகையான உலகங்களையும்;காக்கும் மொய்ம்பினீர் -பாதுகாக்கும் ஆற்றல் உடையவரே!;முனிவு உண்டானால் -(உங்களுக்கு) எங்கள் மேல் சீற்றம் உண்டாகுமானால்;சேரும் அரண் -(நாங்கள் தப்பிச்சென்று) சேர்ந்து வாழும் பாதுகாவல்;உண்டோ -உள்ளதோ (இல்லை);அருள் உண்டு அன்றே - (அதற்கும்) உங்களது கருணையே கதியாக உள்ளதன்றோ? |