தோள்கள் மலைக்கூட்டத்தினும் உயர்ந்தும் வலிமையுடையனவாயும் இருத்தலால் 'எம்மலைக் குலமும்' தாழ எனப்பட்டது. புகழ் ஆகிய சுமையைச் சுமந்தும் தாழாமல் உயர்ந்த தோள் என்று மேலும் தோள்களின் சிறப்பை உணர்த்த, 'இசை சுமந்து எழுந்த' என அடைமொழி தரப்பட்டது. 'இம்மலை' என்ற அண்மைச்சுட்டால் இராமன் வந்துள்ள இடம் ருசியமுகம் என்பது பெறப்படுகிறது. தேவ, நும் என்றது ஒருமைபன்மை மயக்கம். முன்னை செய்யுளில் ''கோலமேனிய, செய்ய கண்ண!'' எனப் புறஅழகில் ஈடுபட்ட அனுமன் இப்பாடலில் 'மீளா நெறியுய்க்கும் தேவரோதாம்' என எண்ணியதற்கேற்பத் ''தேவ'' என விளித்தான். 'பரிதிச் செல்வன் செம்மல்' என்பதால் சுக்கிரீவன் பெருையைும் 'இசை சுமந்து எழுந்த தோளான்' என்பதில் அனுமன் பெருமையும் இப்பாடலில்உணர்த்தப்பட்டுள்ளன. 16 அனுமனை இராமன் பாராட்டி, இலக்குவனுக்கு உரைத்தல் | 3767. | மாற்றம்அஃது உரைத்தலோடும், வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று, இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி 'ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்' என, விளம்பலுற்றான். |
மாற்றம் அஃது -அந்த மறுமொழியை;உரைத்தலோடும்-அனுமன் சொன்ன அளவில்;வரிசிலைக்குரிசில் மைந்தன் -கட்ட மைந்த வில்லை உடைய வலியோனாகிய இராமன்;தேற்றம் உற்று- தெளிவடைந்து;இவனின் ஊங்கு -இவ்வனுமனைக் காட்டிலும்;செவ்வியோர் இன்மைதேறி - செம்மைக் குணம் உடையோர் பிறர் இன்மையைத் தெளிந்து;ஆற்றலும் - திறமையும்;நிறைவும் -நிறைந்த குணங்களும்;கல்வி அமைதியும் - கல்வியால் வரும் அடக்கமும்;அறிவும் -அறிவும்;என்னும் -என்று சொல்லக் கூடியன அனைத்தும்;வேற்றுமை இவனோடு இல்லையாம் - இவனோடு வேறுபாடு உடையனவாக இல்லை;என - என்று நினைத்து; விளம்பலுற்றான் -(இலக்குவனுக்குச்) சொல்லத் தொடங்கினான். அனுமனைவிட நற்குணம் உடையார் இல்லையெனவும், எல்லா மேன்மைப் பண்புகளும் அவனிடம் அமைந்திருத்தலும் தெளிவாக அறிந்தான் இரரமன் என்பதைத் 'தேற்றமுற்று' என்ற தொடர் புலப்படுத்துகிறது. ஆற்றல், அருங்குணங்கள், கல்வி, அறிவு ஆகியவற்றின் வடிவமாகவே அனுமனை இராமன் கண்டான். அறிவு என்பது இயற்கை அறிவு. கல்வி என்பது செயற்கையால் வந்த அறிவாகும். 'புலமிக்கவரைப் புலமை தெரிதல், புலமிக்கவர்க்கே புலனாம்' (பழமொழி 7) என்றவாறு இராமன் அனுமனை அறிந்து கொண்டான். 17 |