பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 467

4354.'அது பெரிய அறிந்த அன்னை,
      அன்னவன் சீற்றம் மாற்றி,
''விதி முறை மறந்தான் அல்லன்;
      வெஞ் சினச் சேனை வெள்ளம்
கதுமெனக் கொணரும் தூது கல்
      அதர் செல்ல ஏவி,
எதிர் முறை இருந்தான்'' என்றாள்;
     இது இங்குப் புகுந்தது' என்றான்.

     அது -(இலக்குவன் வந்த) அந்தக் காரணத்தை;பெரிது அறிந்த
அன்னை -
நன்றாக உணர்ந்த என் தாயாகிய தாரை;அன்னவன் சீற்றம்
மாற்றி -
அந்த இலக்குவனது சினத்தைத் தணித்து; (இலக்குவனைப் பார்த்து);
விதிமுறை மறந்தான் அல்லன் -
(சுக்கிரீவன் இராமனது) கட்டளையை
மறந்தானில்லை;வெம் சினச் சேனை வெள்ளம் -கடுங்கோபத்தையுடைய
வானரச் சேனைகளின் பெருந்தொகுதியை;கதுமெனக் கொணரும் -
விரைவில் கொண்டு வருவதற்குரிய;தூது -தூதுவர்களை;கல் அதர் செல்ல
ஏவி -
கற்கள் நிறைந்த மலை வழியில் போகும்படி கட்டளையிட்டு அனுப்பி;
எதிர்முறை இருந்தான் -
(அந்த வானரப் படையின் வருகையை) எதிர்
நோக்கியிருந்தான்';என்றாள் -என்று கூறினாள்;இது இங்குப் புகுந்தது -
இது தான் இப்பொழுது இங்கே நடைபெற்ற செயலாகும்'';என்றான் -என்று
(சுக்கிரீவனைப் பார்த்து அங்கதன்) சொல்லி முடித்தான்.

     தூதர்கள் மூலமாக வானரப் படைகளைத் திரட்டக்
காலதாமதமாவதற்கான காரணத்தைக் குறிப்பாக உணர்த்த முற்பட்ட தாரை
'கல்லதர் செல்ல ஏவி' என்றாள்.

     சுக்கிரீவன் வானர சேனைகளை வருவிக்கத் தூதர்களை அனுப்பிய
செய்தி மீண்டும் மீண்டும் உரைக்கப் பெறுகிறது.  தவிர, அனுமன்
சுக்கிரீவனுக்குக் கார் கால முடிவைக் கூறி எச்சரிக்க, அவன் அனுமனையே
எல்லாத் திசைகளுக்கும் அனுப்பக் கட்டளையிட்டான் என்றும்.  அதன் பின்பு
அயர்ந்து விட்டான் என்றும் வான்மீகத்தில்கூறப்பெற்றள்ளன.            86

'இலக்குவன் வரவை முன்னமே தெரிவியாமை ஏன்' என வினாதல்

4355.சொற்றலும், அருக்கன் தோன்றல்
      சொல்லுவான், 'மண்ணில் விண்ணில்
நிற்க உரியார்கள் யாவர்,
      அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
விற்கு உரியார், இத் தன்மை
     வெகுளியின் விரைவின் எய்த,
எற்கு உரையாது, நீர் ஈது
      இயற்றியது என்கொல்?' என்றான்.