மைந்தா -வலிமையை உடைய இலக்குவ!இவன் வடிவம் -இவனது வடிவம்;மாணி ஆம் படிவம் அன்று -இப்போது காணப்பெறும் சாதாரண பிரமச்சாரி வடிவம் அன்று;மற்று- பின் யாதெனில்;இவ்வுலகுக்கு எல்லாம் -இந்த உலகங்களுக்கு எல்லாம்;ஆணி என்னலாம் -அச்சாணி என்று சொல்லக்கூடிய;ஆற்றற்கு ஏற்ற - (இவன்) திறமைக்கு ஏற்றதாகிய;சேண் உயர் பெருமை தன்னை -மிகவும் மேம்பட்ட சிறப்புக்களை;சிக்கு அறத் தெளிந்தேன்-(நான்) ஐயமின்றித் தெரிந்து கொண்டேன்;பின்னர்க் காணுதி மெய்ம்மை -அஃது உண்மையாதலை நீயும் பின்பு காண்பாய்;என்று, தம்பிக்கு -என்று தம்பியாகிய இலக்குவனுக்கு;கண்ணன் கழறி - இராமபிரான் இடித்துக் கூறி . . . . குளகச்செய்யுள்; - அடுத்த பாடலில் 'என்றான்' என்பதோடு முடியும். காட்சியால் சாதாரண மாணியாகத் தோன்றினாலும் செயல்திறமையில் இவ்வுலகுக்கெல்லாம் அச்சாணி எனத் தக்கவன் அனுமன் என்பதால் 'ஆணி இவ்வுலகுக் கெல்லாம்' என்றார். 'ஆகவே இவனது உருவம் கண்டு குறைத்து மதித்திடலாகாது என்றதாயிற்று. 'உருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து' என்னும் (குறள் 667) திருவள்ளுவரின் சொற்பொருள் இச்செய்யுளில் அமைந்தமை உணர்க. சேண் உயர் - ஒரு பொருட்பன்மொழி; கண்ணன் - என்றது இராமனை. அழகிய கண்களை உடையவன், கண்ணோட்டம் மிக்கவன்; கருநிறமுடையவன் எனப்பல பொருள் கூறுவர். ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் கொண்ட சொல்லின் செல்வன் என, விரிஞ்சனோ? விடை வலானோ? என வியந்தும் பலவாறாக அனுமனது பெருமைகளை எடுத்துக் கூறியும் அதைக்கேட்டும் கேளாதவன் போல் - குறிப்பறியாதவன் போல் இடித்த புளியாக நின்ற இலக்குவனை இடித்துக் கூறினான் இராமன் என்பதைக் 'கழறி' என்ற சொல்லால் கம்பர் குறித்துள்ள நயம் காணத்தக்கதாகும். 19 சுக்கிரீவனைக் காட்டுக என இராமன் வேண்டுதல் | 3770. | 'எவ்வழி இருந்தான், சொன்ன கவிக் குலத்து அரசன்? யாங்கள், அவ் வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்; இவ்வழி நின்னை உற்ற எமக்கு, நீ இன்று சொன்ன செவ் வழி உள்ளத்தோனைக் காட்டுதி, தெரிய' என்றான். |
சொன்ன கவிக்குலத்து அரசன் -(அனுமனை நோக்கி) ''நீ சொன்ன குரங்குக் கூட்டத்தின் அரசனாகிய சுக்கிரீவன்;எவ்வழி இருந்தான் - எவ்விடத்தில் உள்ளான்? யாங்கள் -நாங்கள்;அவ் வழி அவனைக் காணும் -அவ்விடத்திற்குச் சென்று அவனைக் காணும்;அருத்தியால் - விருப்பத்தோடு;அணுக வந்தேம் - |