சென்றுள்ள தூதர்களோடு;புகுதும் சேனையை -இனி வரும் வானர சேனையை;நீ உடன் கொணருதி -நீ உன்னோடு அழைத்து வருக;என - எனவும்; ஈண்டு இருத்தி - (அதுவரை நீ) இங்கேயே இருப்பாய்; எனா - எனவும்;அனுமனை ஏயினன் -அனுமனுக்குக் கட்டளை யிட்டவனாய்; நாயகன் இருந்துழி -தலைவனான இராமன் தங்கியிருந்த இடத்திற்கு;கடிது நண்ணினான் -விரைந்து போகலானான். தூதரின் - உருபு மயக்கம். இருந்த உழி என்பது இருந்துழி எனத் தொக்கு வந்தது. ஏயினன் - முற்றெச்சம். 118 சுக்கிரீவன் இராமனை அடைந்து தொழுதல் 4387. | அங்கதன் உடன் செல, அரிகள் முன் செல, மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல, சங்கை இல் இலக்குவன் - தழுவி, தம்முன்னின், செங் கதிரோன் மகன் கடிது சென்றனன். * |
செங்கதிரோன் மகன் -சிவந்த ஒளிக்கற்றைகளையுடைய சூரியன் மகனான சுக்கிரீவன்;சங்கை இல் -எப் பொருளிலும் ஐயம் திரிபு இல்லாத (தூய மனமுடைய);இலக்குவன் தழுவி -இலக்குவனைத் தழுவிக் கொண்டு; அங்கதன் உடன்செல -அங்கதன் தன்னுடன் வர வும்;அரிகள் முன் செல -வானரங்கள் முன்னே செல்லவும்;மங்கையர் உள்ளமும் -(அன்புள்ள) வானர மகளிரின் மனமும் பின் தொடர்ந்து வரவும்;வழியும் பின் செல - கடந்தவழிகள் பின்னே தங்கி விடவும்;தம்முனின் -தமையனான இராமனிடம்;கடிது சென்றனன் -விரைந்து சென்றான். சுக்கிரீவனுடைய காதலுக்கு உரியர் ஆகலின் மகளிர் மனம் அவன் பின் சென்றது என்றார். பின்செல: இரட்டுற மொழிதல் பின் தங்க பின்தொடர என்னும் இருபொருள் தருதலால். தம்முன்: இராமனால் தம்பியாகக் கருதப்பட்டவனாகலின் தம்முன் என்றார். அரசனுக்கு முன்பு வீரர்கள் செல்வது மரபாதலின் 'அரிகள் முன்செல' என்றார். 119 4388. | ஒன்பதினாயிர கோடி யூகம், தன் முன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற, மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற, மின் பொரு பூணினான் செல்லும் வேலையில், |
|