அவனைச்சார வந்தோம்;இவ்வழி-இந்த இடத்தில்;நின்னை உற்ற எமக்கு- உன்னை எதிர்ப்பட்ட எங்களுக்கு;நீ இன்று சொன்ன -நீ இப்போது கூறிய;செவ்வழி உள்ளத்தோனை -செந்நெறியில் செல்லும் உள்ளம் உடைய சுக்கிரீவனை;தெரியக் காட்டுதி - (நாங்கள் தெரிந்து கொள்ளுமாறு) காட்டுவாயாக''; என்றான் -என்று கூறினான். அனுமன் தன் தலைவனைப் 'பரிதிச் செல்வன் செம்மல்' (3766) என்று குறிப்பிட, இராமன் 'கவிக்குலத்து அரசன்' எனச் சுக்கிரீவன் பெருமை தோன்றப் பேசினான். அரசனாதலின் அவன் இருக்கும் இடத்தில் சென்று காண்பதே முறையாதலின் 'செவ்வழி உள்ளத்தோனைத் தெரியக் காட்டுதி' என்றான். 20 அனுமன் விடை | 3771. | 'மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில், மற்றுப் பூதரப் புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே? ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின், அன்னான், தீது அவித்து அமையச் செய்த, செய் தவச் செல்வம் நன்றே! |
மாதிரப் பொருப்போடு -திசைகளின் எல்லைகளில் உள்ள சக் கரவாளகிரி என்னும் மலையோடு;ஓங்கு-உயர்ந்து;வரம்பு இலா உலகில்- எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் உலகத்தில்;பூதரப் புயத்து வீரர் - பூமியைத் தாங்கும் மலைபோன்ற (உலகத்தைத் தாங்கும்) தோள்களையுடைய வீரர்களாகிய;நும் ஒக்கும் -உங்களை ஒத்து விளங்கும்;புனிதர் யாரே - தூயவர் வேறு யாருளர்? (எவருமிலர்);அவனை ஆதரித்து - அச்சுக்கிரீவனிடத்து அன்பு காட்டி;காண்டற்கு அணுகினிர் என்னின் - அவனைக் காண்பதற்க நீங்கள் இங்கு வந்தீர்கள் என்றால்;அன்னான் - அச்சுக்கிரீவன்;தீது அவித்து -தீமைகளைச் செய்யும் ஐம்பொறிகளை அடக்கி;அமையச் செய்த -பொருத்தமுறச் செய்த;செய்தவச் செல்வம் - செய்தவமாகிய செல்வம்;நன்றே -சிறப்புடையதாகும். மாதிரப் பொருப்பு என்றது, சக்கரவாளகிரியை. திசைகளின் எல்லையில் இருப்பதால் அப்பெயர்பெற்றது. பூதரம் - மலை, பூமியைத் தாங்குவது என்ற காரணம் பற்றி வந்தது. வலிமையினாலும், உயர்வாலும், நில உலகை நிலை பெறச் செய்தலினாலும் மலை தோள்களுக்கு உவமை ஆயிற்று. வாலியினை வெல்ல வேண்டும் என்ற நோக்கம் உடையவன் ஆதலின் தோளின் பெருமையை அனுமன் பேசினான். புனிதர் யாரே - ஏகாரம் எதிர்மறை. பெருந்தவம் செய்திருந்தாலன்றி இராமபிரானைக் காணும் பேறு பெறாமையின் 'தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே'என்றான். 21 |