செல - ஒரு புறம் வரவும்;காதல் முன்செல -(இராமனைக் காண வேண்டுமென்ற) ஆசை முன்னே செல்லவும்;மானவன் இருந்த -இராமன் தங்கியிருந்த;மால்வரை -பெரிய மலையை;நொய்தினின் எய்தினன் - விரைவாகச் சென்றடைந்தான். பெரியவரிடத்துச் செல்லும்போது ஆடம்பரத்துடன் செல்லுதல் தகுதியாகாது. ஆதலால் இராமனிடம் செல்லும் சுக்கிரீவன் வானரசேனைகளை விட்டு அங்கதனும் சிறிது அப்பால் வரத் தான் தனியே செல்பவனானான் என்பது. இராமன் தங்கியிருந்த இடத்தை ஆர்வமிகுதியால் சுக்கிரீவன் வேகமாகச் சென்றதனால் வானர வீரரும் அங்கதனும் பின்னிட நேரிட்டது எனவும் கூறலாம். கழலுக்கு நோன்மை - பிறக்கிடாத தன்மை. காதல் முன்செல -இராமனைக் காணு முன்னரே காணவேண்டும் என்ற ஆசை முன் செல என்றவாறு. 'நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏற' (பெ.பு:கண்ணப்ப. 103) எனத் திண்ணனாருக்கு முன் அவர் கொண்ட அன்பு முன்னே சென்றதாகச் சேக்கிழார் குறிப்பிடுதல் இங்கே ஒப்புநோக்கத்தக்கது. 124 | 4393. | கண்ணிய கணிப்ப அருஞ் செல்வக் காதல் விட்டு, அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால், நண்ணிய கவிக் குலத்து அரசன், நாள்தொறும் புண்ணியன் - தொழு கழல் பரதன் போன்றனன். |
கண்ணிய - யாவரும் கருதக் கூடிய;கணிப்ப அருஞ் செல்வம் - அளவிடமுடியாத (மிகப் பெருஞ்) செல்வத்தில்;காதல்விட்டு -ஆசையை நீத்து;அண்ணலை -இராமனின்;அடிதொழ அணையும் -திருவடிகளை வணங்குவதற்குப் பொருந்திய;அன்பினால் நண்ணிய -பக்தியோடு அடைந்த;கவிக் குலத்து அரசன் -வானர குலத்தலைவ னான சுக்கிரீவன்; நாள்தொறும் -தினந்தோறும்;புண்ணியன் கழல் தொழு -புண்ணிய வடிவாகிய இராமனைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்ற;பரதன் போன்றனன் -பரதனையொத்து விளங்கினான். சுக்கிரீவன் இராமனிடம் கொண்ட பக்தி பரதனது பக்தியைப் போலும் என்பது. பரதன் செல்வப் பற்றுச் சிறிதுமின்றி இராமனுடைய பாதுகைகளை நாள்தோறும் வணங்கும் தன்மையன்; அரச போகத்தில் மூழ்கிக் கிடந்திடாமல் இராமனிடம் பக்திகொண்டு அப் பெருமானின் திருவடிகளை வணங்கி வரும் பரதனைச் சுக்கிரீவனுக்கு உவமைகூறினார். 125 | 4394. | பிறிவு அருந் தம்பியும் பிரிய, பேர் உலகு இறுதியில் தான் என இருந்த ஏந்தலை, |
|