முற்ற - நிறைவேற்ற; தொல்அறம் துணிவர் அன்றே- (சான்றோர்கள்) தொன்று தொட்டு வரும் அறங்களைச் செய்யத் துணிவார்கள் அல்லவா? கொடுங்குலப் பகைஞன் ஆகி- தன் குலத்திற்கே கொடிய பகைவனாகி; கொல்லிய வந்த -கொல்வதற்காக வந்த;கூற்றை -யமன் போன்ற பகைவனை எண்ணி;நடுங்கினார்க்கு-அஞ்சியவர்களுக்கு;அபயம் நல்கும் அதனினம் -'அஞ்சாதே' என அபயம் கொடுக்கும் அறத்தைக் காட்டிலும்; நல்லது உண்டோ -மேம்பட்டதோர் அறம் உண்டோ? (இல்லை). வேள்வி முதலாய பல்வேறு அறங்களுள், அஞ்சிச் சரண் அடைந்தவர்களுக்கு அபயம் அளிப்பதே சிறந்த அறம் ஆதலால் சுக்கிரீவனுக்கு அபயம் அளித்து அருளுதல் வேண்டும் என்பது அனுமனின் வேண்டுகோளாகும். 'உடைந்தவர்க்கு உதவானாயின், உள்ளதொன்றீயானாயின் அடைந்தவர்க்கு அருளானாயின், அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?'' (6472) என்ற இராமன் கூற்று ஒப்பு நோக்கத்தக்கது. அபயம் - பயம் இல்லாது செய்தல் கொல்லிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; கூற்று - உவமைஆகுபெயர். 23 | 3774. | ''எம்மையே காத்திர்'' என்றல் எளிது அரோ? இமைப்பு இலாதோர் - தம்மையே முதல் இட்டு, ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்; முருகற் செவ்வி உம்மையே புகல் புக்கேமுக்கு, இதின் வரும் உறுதி உண்டோ? |
இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு-கண்கள் இமைத்தல் இல்லாத தேவர்களை முதலாகக் கொண்டு; ஆன்ற சராசரம் - உயர்ந்த அசையும் பொருள்களையும் அசையாப்பொருள்களையும்; சமைந்த ஆற்றல் - படைத்த ஆற்றலை உடைய; மும்மை ஏழ் உலகும் காக்கும் -மூன்று வகைப்பட்ட ஏழு உலகங்களையும் பாதுகாக்கும்; முதல்வர் நீர் - தலைவர் நீங்கள் (ஆதலால்);எம்மையே காத்திர் -எளியராகிய எங்களைமாத்திரமே காப்பாற்றுவீர்;என்றல் -என்று கூறுதல்;எளிது -(உங்களுக்கு) எளிமைத் தன்மையைக் கற்பிப்பது ஆகும்;முருகற் செவ்வி- முருகனைப் போன்ற சிறப்பினை உடைய;உம்மையே புகல்புக்கேமுக்கு- உங்களையே புகலிடமாகக் கொண்டு அடைக்கலம் அடைந்த எங்களுக்கு;இதின் வரும் உறுதி உண்டோ - இதைக் காட்டிலும் வந்தடையக்கூடிய நன்மை வேறு உளதோ? (இல்லை), இராமலக்குவரின் சிறப்பை அறிந்து, அவர்தம் ஆற்றலைப்புகழ்ந்து பேசித் தமக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்குமாறு அனுமன் வேண்டினான். முருகன் - முருகை உடையவன்; அழகும் இளமையும் தெய்வத் தன்மையும் உடையவன். எம்மையே தம்மையே - ஏகாரங்கள் பிரிநிலை; அரோ - அசைநிலை. 24 |