இலக்குவன் தங்கள் நிலையை அனுமனுக்கு உரைத்தல் | 3775. | 'யார் என விளம்புகேன் நான், எம் குலத் தலைவற்கு, உம்மை? வீர! நீர் பணித்திர்! ' என்றான், மெய்ம்மையின் வேலி போல்வான்; வார்கழல் இளைய வீரன், மரபுளி, வாய்மை யாதும் சோர்வு இலன், நிலைமை எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்: |
மெய்ம்மையின் வேலி போல்வான் -மெய்ம்மையைப் பாதுகாக்க அமைந்த வேலி போல்பவனாகிய அனுமன், (இராமலக்குவரைப் பார்த்து); வீர-'வீரர்களே!எம்குலத்தலைவற்கு -எங்கள் குலத் தலைவனாகிய சுக்கிரீவனுக்கு;உம்மை நான் -உங்களை நான்;யார் என விளம்புகேன்- யாவர் என்று சொல்வேன்? நீர்பணித்திர் -நீங்கள் சொல்லுங்கள்'; என்றான்- -;வார்கழல் இளையவீரன் -நீண்ட வீரக்கழல் அணிந்த இளையவீரனாகிய இலக்குவன்;மரபுளி - முறைப்படி;வாய்மை யாதும் - உண்மைநிகழ்ச்சிகள் யாவற்றையும்;சோர்வு இலன்- சோர்வு இல்லாதவனாய்;நிலைமை எல்லாம் - தங்களுக்கு நேர்ந்த நிலைமை களையெல்லாம்;தெரிவுறச் சொல்லலுற்றான் - நன்றாய் விளங்குமாறு சொல்லத்தொடங்கினான். 'நீங்கள் யார்'? என வினவாமல் 'யாரென விளம்புகேன் நான் என் குலத்தலைவற்கு உம்மை' என்ற தொடரால் அனுமன் வினவியது. அனுமனின் அடக்கத்தை நாகரிகமாய் விளக்குதல் காணலாம்; எப்போதும் உண்மையே பேசுபவன் ஆதலின் மெய்ம்மை காப்பதற்கு அவதரித்த இராமபிரானுக்குக் காவல் ஆவான் என்பது தோன்ற, அனுமன் 'மெய்ம்மையின் வேலி போல்வான்' எனப்பட்டான். உளி - மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தது. நாடு நீங்கியது, சீதையை இழந்தது என எல்லா நிகழ்ச்சிகளையும் விடாது உரைத்தனன் ஆதலின் 'வாய்மை யாதும் சோர்விலன் நிலைமை எல்லாம் தெரிவுற' என்றார். விளக்கமாகக் கூறியதைத் 'தெரிவுற' என்ற சொல் புலப்படுத்தும். விளம்புகேன் - ககர ஒற்று இடைநிலை - எதிர்காலம் காட்டியது. குகனுக்கும் சடாயுவிற்கும் இலக்குவனே தம் வரலாறு கூறியது இங்கு நினைக்கத் தகும். 25 | 3776. | 'சூரியன்மரபில் தோன்றி, சுடர் நெடு நேமி ஆண்ட ஆரியன்; அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட வீரியன்; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட காரியன்; கருணை அன்ன கண்ணன் அக் கவிகை மன்னன்; |
|