பக்கம் எண் :

அனுமப் படலம்53

     'அக் கவிகை மன்னன் -அந்த வெண்கொற்றக் குடையை உடைய
அரசன்; சூரியன் மரபில் தோன்றி- சூரிய குலத்தில் தோன்றி; சுடர் நெடு
நேமி -
ஒளி மிகுந்த பெரிய ஆணைச் சக்கரத்தை உடையவனாய்;ஆண்ட
ஆரியன்-
உலக முழுவதும் ஆட்சி செலுத்திய உயர்ந்தோன்;அமரர்க்காக-
தேவர்கள் பொருட்டு;அசுரரை ஆவி உண்ட - சம்பரன் முதலிய
அசுரர்களை வென்று உயிரைப் பறித்த;வீரியன் - வீரம் உடையவன்;
வேள்வி செய்து -
பல வேள்விகளைச் செய்து;விண் உலகோடும்
ஆண்ட-
மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆட்சி புரிந்த;காரியன்-
செயல்திறம் படைத்தவன்;கருணை அன்ன -அருளே வடிவு
எடுத்தாற்போன்ற;கண்ணன் - கண்ணோட்டம் உடையவன்;

     அக்கவிகை மன்னன். . . . . தயரதன் என அடுத்த செய்யுளில் முடியும்.
தேவர் வேண்ட, சம்பரன் முதலிய அசுரர்களை வென்று மீட்ட
விண்ணுலகத்தைத் தயரதன் இந்திரனுக்குக் கொடுத்த சிறப்புப் பற்றி
'விண்ணுலகோடும் ஆண்ட' எனப்பட்டான்.  இச் செய்தி 'இன்தளிர்க் கற்பக
நறுந்தேன்' எனத் தொடங்கும் பாடலிலும் (322) விசுவாமித்திரரால்
உணர்த்தப்பட்டது.

     கண்ணன் என்றது இங்குக் கண்ணோட்டத்தைக் குறிக்கும்.  நேமி -
சக்கரம் ஆணையைச் சக்கரமாகக் குறிப்பது மரபு.  கவிகை - கவிந்திருப்பது;
காரணப்பெயர்.                                                26

3777.'புயல் தரு மதத் திண் கோட்டுப்
     புகர் மலைக்கு இறையை ஊர்ந்து,
மயல் தரும் அவுணர் யாரும்
     மடிதர, வரி வில் கொண்ட,
இயல் தரும் புலமைச் செங்கோல்
     மனு முதல் யாரும் ஒவ்வாத்
தயரதன்; கனக மாடத் தட
     மதில் அயோத்தி வேந்தன்; *

     புயல் தரு மதம் - மேகம் போலப் பொழியும் மதத்தையும்; திண்
கோடு -
வலிமையான தந்தங்களையும்; புகர் -(முகத்தில்) புள்ளி களையும்
உடைய;மலைக்கு இறையை ஊர்ந்து - மலைகள் போன்ற யானைகளுக்குத்
தலைவனாகிய பட்டத்து அரச யானையை ஏறிச் செலுத்தி;மயல் தரும்
அவுணர் யாரும்
- மதி மயக்கம் கொண்ட அசுரர்கள் எல்லாம்;மடிதர -
அழியும்படி;வரிவில் கொண்ட - கட்டமைந்த வில்லைக் கொண்டு போர்
செய்த;இயல்தரும் புலமைச் செங்கோல் -இயல்பாகப் பொருந்திய
அறிவினையும் செங்கோலையும் உடைய;மனு முதல் யாரும் ஒவ்வா-மனு
முதலான எந்த அரசர்களும் நிகர் ஆகமாட்டாத;தயரதன் -தயரதன்
என்பான்;கனக மாடம் -பொன் மயமான மாளிகைகளையும்;தட மதில் -
பெரிய மதிலையும் உடைய;அயோத்தி வேந்தன் -அயோத்தி நகரத்திற்கு
வேந்தனாவான்.