பக்கம் எண் :

536கிட்கிந்தா காண்டம்

     கவிஞர்களுக்குக் கடவுளிடத்துள்ள பொதுநோக்கத்தைக் குறிப்பதாகும்
இச் செய்யுள்.  ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றும் வானத்திலிருந்து
விழும் மழைத் தாரைகள் அனைத்தும் கடலையே சென்று சேர்வது போன்று
சீவான் மாக்கள் எவ்வெத் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தினும்
அவ்வணக்கம் கேசவனையே சாருமென்றும், யாதொரு தெய்வங் கொண்டீர்.
அத் தெய்வமாகி, யங்கு மாதொருபாகனார்தாம் வருவர், என்றும் கூறப்படுவன
காணலாம்.

     வைணவத்தில் முதலாழ்வார்களின் பாசுரங்களில் சிவபிரானையும்,
திருமாலையும் ஒன்று படுத்திக் கூறியிருப்பதைக் காணமுடிகிறது.
'அரன்நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி' - (முதல் திருவ. 5);
'தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்' (மூன்றாம் திருவ. 63)

     வசிட்ட முனிவனின் அரிய பத்தினியான அருந்ததியின் பெயர் கொண்ட
மலையாதலின் 'அருந்ததி மா நெடுமலை' எனச் சிறப்பித்தான் சுக்கிரீவன்.   24

4471.'அஞ்சு வரும் வெஞ் சுரனும், ஆறும், அகன்
      பெருஞ் சுனையும், அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வள நாடும்
     பிற்படப் போய்வழிமேல் சென்றால்,
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு, அமிர்து நனி
      கொடுத்து, ஆயைக் கலுழன் நல்கும்
எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி, அதன்
      புறம் சார ஏகி மாதோ

     அஞ்சுவரும் வெஞ்சுரனும் .(எல்லா வுயிர்களும்) அஞ்சக்கூடிய
கொடிய பாலைவனமும்;ஆறும் அகல்பெருஞ் சுனையும் -நதிகளும்,
அகன்ற பெரிய சுனைகளும்;அகில் ஓங்கு ஆரம் மஞ்சு இவரும் நெடுங்
கிரியும் -
அகில் மரங்களும், உயர்ந்து வளர்ந்த சந்தன மரங்களும் மேகங்கள்
வரை பொருந்திய மலைகளும்;வள நாடும் -செழிப்பான தேசங்களும்;
பிற்படப் போய் -
(உமக்குப் பின்புறத்தவாகுமாறு) அவற்றைக் கடந்து சென்று;
வழிமேல் சென்றால் -
அப்பாலுள்ள வழியில் சென்றால்;கலுழன் -
கருடனானவன்;நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு -நஞ்சு பொருந்திய
வாயினையுடைய நாகங்களுக்கு;அமிர்து நனி கொடுத்து -அமிழ்தத்தை
மிகுதியாகக் கொடுத்து;ஆயை நல்கும் -(தன்) தாயாகிய விநதையை
(அடிமைத் தொழிலிலிருந்து) மீட்பதற்கிடமான;எஞ்சு இல் மரகதப்
பொருப்பை -
எந்தக் குறையுமில்லாத மரகத மலையை;இறைஞ்சி -
வணங்கி;அதன் புறம் சார ஏகி -அம் மலையின் பக்கத்து வழியைப் பற்றி
அப்பால் சென்று. . . .

     மாது, ஓ - ஈற்றசைகள்.

     மலைகள் மேகமண்டலத்தையும் கடந்த உயரத்தன என்பார் 'மஞ்சு
இவரும் நெடுங்கிரி' என்றார்.  அரவு: காசியப முனிவனின் மனைவியான
கத்துரு என்பவளது வயிற்றில் பிறந்த வாசுகி முதலிய நாகங்கள். கலுழன்:
கருடன் - காசியப முனிவரின் மனைவியான விநதையினிடம் பிறந்தவன்.  25