உவமையாகுமென்றால் அவ்வாறே, அவள் சொற்களுக்க உவமையாகாத தேவாமிர்தம் முதலிய பொருள்களையும் அச் சொற்களுக்கு உவமம் கூறவேண்டிவரும்; உண்மையாகப் பார்த்தால் ஒரு பொருளும் அவற்றிற்கு உவமம் ஆகாது; அமிழ்தம் தான் உவமானமாக அமைவதல்லாமல் உபமேயமாக நின்று தனக்கு வேறு ஓர் உவமையைப் பெறாதவாறு போலச் சீதையின் பற்களும் தாம் உவமானமாக நிற்பதல்லாமல் தமக்கு வேறு ஓர் உவமையைப் பெற என்பது. பிறிது மொழிதலணி. உவமைப் பொருள் உயர்ந்ததாய் அமைய வேண்டியிருத்தலால் சீதையின் பற்களுக்க உவமை கூறத்தக்க பெருமைவாய்ந்த பொருள் ஒன்றுமில்லை என்றான். 51 | 4498. | 'ஓதியும், எள்ளும், தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும் என்றால், சோதி செம் பொன்னும், மின்னும், மணியும்போல், துளங்கித் தோன்றா; ஏதுவும் இல்லை; வல்லார் எழுதுவார்க்கு எழுத ஒண்ணா நீதியை நோக்கி, நீயே நினைதியால், - நெடிது காண்பாய்! |
நெடிது காண்பாய் -(எதிர்காலத்தையும் கணிக்கும்) தொலை நோக்கு உடையவனே;ஓதியும் -பச்சோந்தியையும்;எள்ளும் -எள் மலரையு தொள்ளைக் குமிழும் -தொளையுள்ள குமிழம் பூவையும்;மூக்கு - (சீதையின்) மூக்கானது;ஒக்கும் என்றால் -ஒத்திருக்கும் என்று சொன்னால் (அப்பொருள்கள்);சோதி செய் பொன்னும் -ஒளி வீசுகின்ற பொன்னையும்; மின்னும் மணியும் போல் -ஒளிவிடுகின்ற இரத்தினங்களையும் போல; துளங்கித் தோன்றா -விளங்கிக் காணப்படா;ஏதுவும் இல்லை -(அவ்வாறு ஒளி வீசுதற்குரிய) காரணமும் (அப் பொருள்களிடம்) இல்லை;எழுதுவார் வல்லார்க்கு -(இன்னும்) ஓவியம் தீட்டுவதில் திறமை பெற்றவர்களுக்கும்; எழுத ஒண்ணா -தீட்ட முடியாத;நீதியை நோக்கி -(மூக்கின்) இத் தன்மையை ஆராய்ந்து பார்த்து;நீயே நினைதி -(அதன் அழகை) நீயே உணர்ந்து கொள்வாய். சீதையின் மூக்கு, பொன் போலவும், இரத்தினம் போலவும் ஒளிவிடுகின்றதே; அவ்வாறிருக்க அம்மூக்கிற்குப் பச்சோந்தி முதலியன எவ்வாறு உவமையாகும்? உவமையாகமாட்டா. மேலும், ஓவியத்தில் எழுதமுடியாதவாறு பேரொளி மிகுந்து அழகு கூடியிருத்தலால் அதன் சிறப்புத் தன்மையை ஊகித்து அறிவாய் என்பது. வேற்றுமையணியை அங்கமாகக் கொண்டு வந்த எதிர்நிலையணி. ஓதி - (ஓந்தி): இடைக்குறை. தொள்ளை - (தொளை) : விரித்தல் விகாரம். ஒளியும் வடிவழகும் பெற்ற சீதையின் மூக்கிற்கு உவமையில்லைஎன்றவாறு. 52 |