அந்த உவமை அப் புருவங்களுக்குப் பொருந்திய உவமையாகாது; இழிந்த உவமையேயாகும்; இனி, மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமென்றால், முனை வளைந்தனவாகிய இரண்டு விற்கள் மன்மதனிடம் இல்லையாகையால் அம் மன்மதன் வில் உவமை என்பது ஏற்புடைத்தாகாது என்பது. இழிவுவமை: உயர்ந்த பொருளோடு இறப்ப இழிந்ததை உவமையாகக் கூறுவது. 55 | 4502. | 'நல் நாளும் நளினம் நாணும் நளிரடி நுதலை நாணி, பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பதாகி, முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி, எந் நாளும் வளராதுஎன்னின், இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே. |
முன் நாளில் முளை வெண் திங்கள் -வளர்பிறையின் தொடக்கத்தில் தோன்றுகின்ற வெண்ணிறமான சந்திரன்;நல் நாளும் -நல்ல பகற்காலத்தில் கூட;நளினம் நாணும் -தாமரை மலரும் வெட்கப்படுவதற்குக் காரணமாக; நளிர் அடி -தளிர்போன்ற மெல்லிய அடிகளையுடைய சீதையினது;நுதலை -நெற்றியின் அழகிற்கு (பார்த்து);நாணி -வெட்கப்பட்டு;பல் நாளும் பன்னி -பல நாள்களும் (அதனையே) எண்ணியெண்ணி;ஆற்றா - பொறாமல்;மதி எனும் பண்பதாகி -மதியென்று சொல்வதற்கேற்ற சிந்திக்கும் தன்மையுடைதாய்;முழு நாளும் குறையே ஆகி -(பதினாறு கலைகளும் நிரம்பவேண்டிய) பௌர்ணமியன்றும் கலை குறைவாகத் தோன்றி;எந் நாளும் வளராது -எந்த நாளிலும் வளராதிருக்குமானால்;இறை ஒக்கும் -(சீதையின் நெற்றிக்கு) ஒரு சிறிது உவமையாகும்;இயல்பிற்கு ஆம் - தன்மையுடையதாகும். வளர் பிறையில் முதலில் தோன்றும் பிறைச்சந்திரன் சீதையின் நெற்றியழகை நினைந்து பொறாமைகொண்டு, தான் அதற்கு ஒப்பாகவேண்டுமென்று எண்ணிப் பல நாட்கள் சிந்தித்துப் பதினாறு கலைகளும் நிரம்பவேண்டிய பௌர்ணமியன்றும் தான் அவ்வாறாகாமல் பிறைச் சந்திரனாகவேயிருக்குமானால், அப்பொழுது அது சீதையின் நெற்றிக்கு ஒருபடி ஒப்பாகுமென்பது. முன்னாள் - முதல்நாள். முழுநாள் - பூர்ணிமை. மதி தன் பெயருக்கு இணங்கப் பன்னாள், சீதையின் நுதற்கு உவமையாக வேண்டுமெனச் சிந்தித்தேயாக வேண்டுமெனக் கற்பித்துக் கூறப்பட்டது. ஏ வினாப்பொருளில் வந்தது. 56 | 4503. | 'வனைபவர் இல்லை அன்றே, வனத்துள் நாம் வந்த பின்னர்? |
|