| அனையன எனினும், தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா; வினை செயக் குழன்ற அல்ல; விதி செய விளைந்த; நீலம் புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம்; உவமை பூணா, |
நாம் வனத்துள் வந்த பின்னர் -நாங்கள் காட்டிற்கு வந்த பிறகு; வனைபவர் இல்லை அன்றே -(சீதையின் முன் நெற்றிமயிரை ஒதுக்கி வாரி) ஒப்பனை செய்யக்கூடியவர் இல்லையல்லவா? தாம் அனையன எனினும் - தாம் அத்தன்மையனவானாலும் (அவ்வாறு) வாரி அணி செய்யா விட்டாலும்; தம் அழகுக்கு -தமது வனப்புக்கு;ஓர் அழிவு உண்டாகா -ஒரு குறைவு ஏற்படாது;வினை செய -ஒப்பனை செய்வதால்;குழன்ற அல்ல - சுரிந்தனவாக ஆகாமல்;விதி செய விளைந்த -பிரமன் படைத்ததால் இயற்கையாகவே சுரிந்த தான;நீலம் மணி புனை அளகம் -நீல இரத்தினம் போன்ற நெற்றிக்கு மேலுள்ள அந்த மயிர்த் தொகுதி;என்றும் புதுமை ஆம் -எப்பொழுதும் புதுமையாகவே தோன்றும்;உவமை பூணா -எந்த உவமைப் பொருளையும் ஏற்க மாட்டா. வாரிப் புனைதலாகிய தொழில் செய்யாமல் இருக்கும்போதும் இயற்கையாகவே குழன்று அழகு மிகுந்து புதுமையாகத் தோன்றுகின்ற சீதையின் முன் நெற்றி மயிர்த் தொகுதிக்கு ஏற்ற உவமைப் பொருள் எதையும் எடுத்துக்கூற இயலாது என்பது. பேரழகுள்ள பொருள்கள் காணுந்தோறும் விருப்பத்தையுண்டாக்கிப் பின்னுங் காணுமாறு புதிய பொருள்போலத் தோன்றுதல் இயல்பாதல் பற்றி 'என்றும் புதுமையாம்' என்றான். குழலுதல்: கருமணல் படிந்தாற்போலப் படிப்படியாகச் சுரிந்து அமைதல் அளகம்: முன் நெற்றி மயிர். 57 4504. | 'கொண்டலின் குழவி, ஆம்பல், குனி சிலை, வள்ளை, கொற்றக் கெண்டை, ஒண் தரளம் என்று இக் கேண்மையின் கிடந்த திங்கள் - மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ, அப் புண்டரிகத்தை உற்ற பொழுது, அது பொருந்தி ஓர்வாய். |
கொண்டலின் குழவி -கருமேகத்தின் கொழுந்தும்;ஆம்பல் - செவ்வல்லி மலரும்;குனி சிலை -வளைந்த விற்களும்;வள்ளை - வள்ளைக் கொடியும்;கொற்றக் கெண்டை -வெற்றி மிகுந்த கெண்டை மீன்களும்;ஒண் தரளம் -ஒளி பொருந்திய முத்துக்களும்;என்ற |