பக்கம் எண் :

நாட விட்ட படலம் 561

இக்கேண்மையின் -என்று சொல்லப்பட்ட இத் தன்மையவான பொருள்கள்;
கிடந்த -
அமையப்பெற்ற;திங்கள் மண்டிலம் -சந்திர மண்டலத்தை;
விதியே -
பிரமனே;வதனம் என்று வைத்தனன் -சீதையின் முகமெனறு
அமைத்து வைத்தான்;நீ அப் புண்டரிகத்தை -நீ (சீதையின்) அந்தத்
தாமரை முகத்தை;உற்ற பொழுது -நெருங்க் காணும் பொழுது;அது
பொருந்தி ஓர்வாய் -
அத் தன்மையை நன்றாக ஆராய்ந்து அறிவாய்.

     கொண்டல் குழவி அளகத்திற்கும், செவ்வாம்பல் வாய்க்கும், வளைந்த
விற்கள் புருவங்களுக்கம் வள்ளையிலை காதுகளுக்கும், கெண்டை மீன்கள்
கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாயின.  காண்பதற்கு
இனிமையிலும், நிறத்திலும், கண்டோரை மகிழ்வித்தலிலும் முகத்திற்குத் தாமரை
மலர் உவமையாயிற்று.

     சீதையின் முகமென்று பெயரிட்டுக் கொண்டலின் குழவி முதலியவற்றை
யுடையதொரு சந்திரமண்டலத்தைப் பிரமதேவன் படைத்தான் என்று கூறியது
வஞ்சவொழிப்பணி.  கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல்
எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர் (சிலப். கானல். 11) என்ற சிலப்பதிகார
வரிகளில் உள்ள கற்பனை இங்கே நினைவுகூரத் தக்கது.  விதி -பிரமன்.  58

4505.'காரினைக் கழித்துக் கட்டி,
      கள்ளினோடு ஆவி காட்டி,
பேர் இருட் பிழம்பு தோய்த்து,
      நெறி உறீஇ, பிறங்குகற்றைச்
சோர் குழல் தொகுதி என்று
      சும்மை செய்தனையது அம்மா! -
நேர்மையைப் பருமை செய்த நிறை
      நறுங் கூந்தல் நீத்தம்!

     நேர்மையைப் பருமை செய்த -நுண்மையைக் கொண்டு பருமை
யாகச் செய்ததான;நிறை நறுங்கூந்தல் நீத்தம் -அடந்த மணங் கமழ் கின்ற
(சீதையின்) கூந்தல் தொகுதி;காரினை -கரிய மேகத்தை;கழித்துக் கட்டி -
வெட்டிக் கட்டி;கள்ளினோடு ஆவி காட்டி -தேனையும் (அகில்
முதலியவற்றின் நறுமணப்) புகையையும் ஏற்றி;பேர் இருட் பிழம்பு தோய்த்து
-
அடர்ந்த இருட் பிழம்பிலே தோய்த்து;நெறி உறீஇ -(படிப்படியாக)
நெரித்தலைச் செய்து;பிறங்கு கற்றை -விளங்குகின்ற கற்றையாகிய;சோர்
குழல் தொகுதி என்று -
(கீழே) தாழ்ந்து தொங்கும் தன்மையுள்ள
குழல்தொகுதி என்று பெயரிட்டு;சும்மை செய்து அனையது -சுமையாக
வைத்தது போன்றது.  (அம்மா -வியப்பிடைச் சொல்).

     கரிய மேகத்தைப் பிடித்துச் சீவிக் கட்டி, அதற்குத் தேனையும்
எண்ணெயையும் நறுமணத்தையும் ஊட்டி, பின்னும் கருநிறமமையச் செய்து,
குழல் தொகுதியென்று பெயரிட்டுப் பெருஞ்சுமையை வைத்தாற் போன்றது
சீதையின் கூந்தல் தொகுதியென்பது.  தன்மைத் தற்குறிப்பேற்றவணி. மெல்லிய
மயிரைத் திரட்டிப்