போன்றவர்களாகிய சீதையைக் காணாதவர்களாகி;குப்புற்று ஏகினார் - (அம் மலையிலிருந்து) இறங்கிச் சென்றார்கள். ஏமகூடத்தைப் புகழ்ந்து அதனைச் செம்பொன் நற்கிரியென்றார். கொம்பு : உவமவாகுபெயர். குப்புறுதல் : கீழிறங்குதல். 19 அங்கதன் 'பல பகுதியாகப் பிரிந்து தேடிப் பார்த்தபின் மயேந்திரத்தில் கூடுமின்' எனல் | 4540. | வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை, 'தெள்ளு நீர் உலக எலாம் தெரிந்து தேடி, நீர் எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும்' என்று உள்ளினார், உயர் நெடும் ஓங்கல் நீங்கினார். |
(அங்கதன் முதலான வானரசேனைத் தலைவர்கள்) வெள்ளம் ஓர் இரண்டு என -இரண்டு வெள்ளம் என்று சொல்லுமாறு;விரிந்த சேனையை -பரவியுள்ள தமது குரங்குச் சேனையை (பார்த்து);நீர் -நீங்கள்;தெள்ளு நீர் உலகு எலாம் -தெளிந்த நீர் சூழ்ந்த (தென்திசை) உலகனைத்திலும் அலைந்து (சீதையைத்) தேடிப்பார்த்து; (பிறகு) எள் அரு மகேந்திரத்து - (தென்கடற்கரையிலுள்ள) இகழ்வதற்கரிய மகேந்திரமலையினிடத்தில்;எம்மில் கூடும் -எங்களோடும் வந்து சேருங்கள்;என்று உள்ளினார் -என்று நினைந்து கட்டளையிட்ட வராகி;உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் - உயர்ந்து நீண்ட அந்த ஏமகூடத்தை விட்டு அகன்றார்கள். எல்லோரும் ஒருங்கே சென்று தேடப் புகுந்தால் குறித்த கெடுவுக்குள் எடுத்த செயல் முடியாதெனக் கண்டு தனித்தனித் தொகுதியாகப் பிரிந்து தேடுதல் நல்லது என்று பல பிரிவுகளாகப் பிரித்து விடுத்து அங்கதனும் அவனுடன் சிலரும் தனித்துச் சென்றனர் என்பது இங்குக் குறிக்கப்பட்டது. ஓங்கல்: மலை: காரணக்குறி. 20 அனுமன் முதலியோர் ஒரு சுரத்தையடைதல் | 4541. | மாருதி முதலிய வயிரத் தோள் வயப் போர் கெழு வீரரே குழுமிப் போகின்றார்; நீர் எனும் பெயரும் அந் நெறியின் நீங்கலால், சூரியன் வெருவும் ஓர் சுரத்தைத் துன்னினார். |
மாருதி முதலிய -வாயுவின் மகனாகிய அனுமன் முதலான; வயிரத்தோள் -உறுதியான தோள்களையுடைய;வயப்போர் கெழு வீரரே - வெற்றிதரும் போரில் வன்மையுடன் விளங்கும் வீரர்கள் மட்டும்; |