பக்கம் எண் :

586கிட்கிந்தா காண்டம்

குழுமிப் போகின்றார் -திரண்டு செல்பவராய்;அந்நெறியில் -அந்த
வழியிலே;நீர் எனும் பெயரும் நீங்கலால் -நீர் என்ற பெயர் கூட
இல்லையாதலால்;சூரியன் வெருவும் -வெம்மையான கதிர் களையுடைய
சூரியனும் கண்டு அஞ்சத் தகுந்த;ஓர் சுரத்தை -ஓரு பாலைவனத்தை;
துன்னினார் -
சென்று அடைந்தார்கள்.

     பூமியிலுள்ள நீரை வற்றச் செய்து உலகையே வெம்மை செய்யும்
கதிர்களையுடையனவாய்ப் பாலைக்குரிய தெய்வமாகிய கதிரவனும் கண்டு
அஞ்சக்கூடியதாக இருந்தது அந்தப் பாலைவனம் என்றார்.  நீர் ஒரு சிறிதும்
இல்லையென்றதை 'நீர் எனும் பெயரும் நீங்கிட' என்றார்.  உலகவழக்கு
நவிற்சியணி.  கண்டு என்ற ஒரு முனிவன் தன் பதினாறு வயது மகன் இறந்தது
குறித்துக் கோபித்து இந்த வனத்தை மனிதர் வசிப்பதற்கு ஏற்றதல்லாததும்,
விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் முதலியனஅற்றதும் ஆகுமாறு
சபித்தனாதலால் இவ் வளமான இடம் பாலைவனமாயிற்று என்பர்.

     ஒப்பு : 'வான்நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கவாம்' - (கலித்.
பாலை. 6)  வீரரே - ஏகாரம் பிரிநிலை.                             21

பாலையின் வெம்மை

4542.புள் அடையா; விலங்கு
      அரிய; புல்லொடும்
கள் அடை மரன் இல;
      கல்லும் தீந்து உகும்;
உள் இடை யாவும்
      நுண் பொடியொடு ஓடிய;
வெள்ளிடை அல்லது ஒன்று
      அரிது; - அவ் வெஞ் சுரம்.

     அவ்வெஞ்சுரம் -அந்தக் கொடிய பாலைவனத்தில்;புள் அடையா -
பறவைகள் சென்ற தங்கமாட்டா;விலங்கு அரிய -மிருகங்களும் காண்பதற்கு
அரியன;புல்லொடும் கள் உடை மரன் இல -புல்லும் தேன் பொதிந்த
மலருடை மரங்களும் அடியோடு இல்லை;கல்லும் தீந்து உகும் -கற்களும்
எரிந்து சாம்பலாகிவிடும்;உள் இடை யாவும் -தன்னிடம் பொருந்திய
எல்லாப் பொருள்களும்;நுண் பொடியொடு ஓடிய -சிறு துகள்களாக மாறிப்
பறப்பதால்;வெள்ளிடை அல்லது -வெற்றிடமல்லது;ஒன்று அரியது -
வேறொன்றும் அங்குக் காணப்படாது.

     அந்தப் பாலைவனத்தில் பறவை முதலியன வருவதுமில்லை; மரஞ்செடி
கொடிகளும் வளர்வதுமில்லை; கற்களும் கரிந்து தீய்ந்து போகும்; குறிஞ்சி
முதலிய வேற்று நிலங்களிலிருந்து எப்பொருள் வந்தாலும் அவை யாவும்
துகளாகப் பறக்கின்ற வெப்பம் நிறைந்த வெற்றிடமாகவேயுள்ளது என்ற அப்
பாலைவனத்தின் கொடுமை கூறியவாறு.  வெள்ளிடை :வெற்றிடம்.      22