வெப்பமான பாலை நிலத்தில் செல்வதையாவது தடுக்கும்; (ஆகவே) நன்று என -(இப் பிலத்துள செல்வதே) நல்லது என்று;மனத்தின் எண்ணினார் - மனத்திற் கருதியவர்களாய்;போய்ச் சில அறிதும் என்று -(இதனுள்) சென்று அங்குள்ள சிலவற்றை ஆராய்வோமென்று கூறி;அதனில் புக்கனர் - அப்பிலத்தினுள் புகுந்து சென்றார்கள். இந்தப் பாலைவனத்தில் இனி ஒரு நொடி செல்வதும் உயிரழிவுக்கே காரணமாகும்;ஆகவே, இங்கே காணப்படுகின்ற பில வழியில் சென்றால் அது சீதையிருக்கும் இடமாக இல்லாவிட்டாலுங் கூடப் பாலை நிலத்தின் வெம்மையையாவது தணிக்கும்: ஆதலால், இப்போது இங்கே செல்வதே நாம் செய்யத்தக்கது; மேலும், இதனுள்ளிருக்கும் சில இடங்களிலும் சீதையைத் தேடிப் பார்ப்போ மென்று கருதி வானர வீரர்கள் அப் பிலத்தினுள் புகுந்தனர் என்பது. திண் பிலம் - எளிதில் கடத்தற்கரிய பிலம். ஒழியவும் - இழிவு சிறப்பும்மை. 'ஒழிய' என்னும், செயவென்னெச்சம் தொழிற்பெயர்த் தன்மைத்தாகித் 'தடுத்தல்' தொழிற்குச் செயப்படு பொருளாய் நின்றது. 26 வானரர் இருளில் வருந்துதல் | 4547. | அக் கணத்து, அப் பிலத்து அகணி எய்தினார், திக்கினொடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள், எக்கிய கதிரவற்கு அஞ்சி, ஏமுறப் புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார். |
அக்கணத்து -(வானர வீரர்கள்) அப்பொழுது;அப்பிலத்து அகணி எய்தினார் -அந்தப் பிலத்தின் உள்ளிடத்தையடைந்தவர்களாய்;திக்கினொடு உலகு உற -நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தும்;செறிந்த தேங்கு இருள் - மிக நெருங்கி நிறைந்த பேரிருள்;எக்கிய கதிரவற்கு அஞ்சி -(வானத்தில்) ஏறிய சூரியனிடம் அச்சங் கொண்டு;ஏமுறப்புக்கதே அனையது -பாதுகாப்பு அடையப் புகுந்தது போலத் தோன்றுவதாகிய;ஓர்புரை -ஒரு குகையில்; புக்கு எய்தினார் -புகுந்து சென்றார்கள். வானர வீரர் பிலத்துள் புகுகையில் அதனிடையிலே இருள் செறிந்த ஒரு குகையிலே நுழைந்து செல்லலாயினர் என்பது. அங்கு நிறைந்திருந்த இருளை, தனக்குப் பகைவனான கதிரவனுக்கு அஞ்சிப் பிலத்துள் பதுங்கியிருப்பதாகக் குறித்தது தன்மைத் தற்குறிப்பேற்றவணியாம். எக்கிய - ஏறிய (திசைச் சொல்) அகணி - உள்ளிடம்; புரை: உள்ளறை; (ஏமமுற): ஏமுறு: தொகுத்தல் விகாரம். 27 |