பக்கம் எண் :

594கிட்கிந்தா காண்டம்

     புவி புகழ் சென்னி -(மேலும் அந்த நகரம்) உலகத்தவரால் பெரிதும்
புகழப்படுகின்ற குலோத்துங்க சோழனாகிய;பேர் அமலன் தோள் புகழ் -
பெருமையுள்ள குற்றமற்ற அரசனது தோள்வலிமையைப் புகழ்ந்து பாடிய;
கவிகள் தம் மனை என -
கவிஞர்களின் வீடுகள் போல;கனக ராசியும் -
பொற் குவியலும்;சவியுடைத் தூசும் -ஒளி மிக்க பொன்னாடைகளும்;மென்
சாந்தும் -
மென்மையான கலவைச் சந்தனமும்;மாலையும் -மலர்
மாலைகளும்;அவிர் இழைக்குப்பையும் -ஒளிவிட்டு விளங்கும்
அணிகலன்களின் குவியல்களும்;அளவு இலாதது -அளவில்லாதபடி
நிறையப் பெற்றது.

     குலோத்துங்க சோழன் தன்னை நாடி வந்து பாடுகின்ற கவிஞர்களுக்குப்
பொற்குவியல் முதலியன கணக்கின்றிக் கொடுக்கும் வன்மையுடையவன்
என்பதைக் கம்பர் செய்ந்நன்றியுணர்வால் குறித்தார் என்பது சவி: ஒளி. தூசு:
ஆடை. இழை. அணிகலன். இழைத்துச் செய்யப்படுவது - காரணக் குறி.
இங்கே சோழனது பெருமை உவமான முகத்தால் பாராட்டியுரைக்கப்
பெற்றுள்ளது.  தம்மைப் புரந்த சடையப்ப வள்ளலை ஆங்காங்கே நினைந்து
பாராட்டுவது போலச் சோழ மன்னனையும் இங்கே நினைந்து போற்றுகிறார்
கம்பர்.                                                       35

4556. பயில் குரல் கிண்கிணிப்
      பதத்த பாவையர்,
இயல்புடை மைந்தர், என்று
      இவர் இலாமையால்,
துயில்வுற நோக்கமும்
      துணைப்பது அன்றியும்,
உயிர் இலா, ஓவியம்
      என்ன ஒப்பது;

     பயில் குரல் கிண்கிணிப் பதத்த பாவையர் -(இன்னும் அந்த நகரம்)
ஒலிக்கின்ற ஓசையுடைய சதங்கை அணிந்த கால்களை உடைய மகளிரும்;
இயல்புடை மைந்தர் -
நற்பண்புகள் வாய்ந்த ஆண்களும்;என்று இவர்
இலாமையால் -
என்ற இவர்களுடைய நடமாட்டம் இல் லாததால்;
துயில்வுறும் நோக்கமும் துணைப்பது -
உறங்கப் போகின் றவர்களை
ஒப்பவும்;அன்றியும் -அல்லாமலும்;உயிர் இலா -உயிர் இல்லாமல்
இருக்கின்ற;ஒவியம் என்ன -சித்திரம் போன்றது என்று சொல்வதற்கு;
ஒப்பது -
தகுதியுடையதாகவுள்ளது.

     மிக வல்லமை வாய்ந்த ஓவியன் ஒருவனால் வரையப்பட்ட சித்திரம்
மற்றெவ்வகையிலும் குறைபாடு இல்லாமலிருப்பினும், உயிரில்லாததாகிய ஒரு
குறையைக் கொண்டது போலப் பலவகைக் காட்சிகளும் நிரம்பிய இந்த நகரம்
வேறு வகையால் குறைபாடில்லாமல் இருந்தாலும் தன் காட்சிகளைக் கண்டு
நுகரும் பெண்டிரையும், ஆடவரையும் பெறாத ஒரு பெருங்குறையைக்
கொண்டுள்ளது என்பது.  துணைப்பது என்னும் சொல்லாட்சி காண்க. (துணை
என்ற பெயர்ச் சொல் ஒப்பு என்ற பொருளில்வந்தது).                 36