பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 595

4557. அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்,
தமிழ் நிகர் நறவமும், தனித் தண் தேறலும்,
இமிழ் கனிப் பிறக்கமும், பிறவும், இன்னன
கமழ்வுறத் துவன்றிய கணக்கு இல கொட்பது;

     அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் -(அந்த நகர்)
அமிழ்தத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும்;தமிழ் நிகர்
நறவமும் -
தமிழ்மொழியையொத்த இனிய தேனும்;தனித்தண் தேறலும் -
ஒப்பற்ற குளிர்ந்த மதுவும்;இமிழ் கனிப் பிறக்கமும் -இனிய பழங்களின்
திரட்சியும்;இன்னன பிறவும் -இவை போன்ற பிற உணவுப் பொருள்களும்;
கமழ்வு உறத் துவன்றிய -
மணம் வீசுமாறு நிறைந்துள்ள;கணக்கு இல்
கொட்பது -
எல்லையற்ற பெருமை வாய்ந்தது.

     உண்டு களித்தற்கு இனிய பலவகைப் பண்டங்களும் நிறைந்துள்ளது
அந்த நகரம் என்பது.  'தமிழ் நிகர் நறவமும்' என்ற தொடரால் ஆசிரியரின்
மொழிப் பற்றினையுணரலாம்; தொடர்பு கொண்டாரின் அறிவையும்
உணர்வையும் கவர்ந்து கொள்ளை கொள்ளுதல் பொதுப்பண்பு.  கொட்பு:
பெருமை; பிறக்கம்: திரட்சி.(மலை-) இலக்கணை.                   37

கலிவிருத்தம் (வேறுசந்தம்)

4558. கன்னி நெடு மா நகரம்
      அன்னது எதிர் கண்டார்;
'இந் நகரம் ஆம், இகல்
      இராவணனது ஊர்' என்று,
உன்னி உரையாடினர்;
      உவந்தனர்; வியந்தார்;
பொன்னின் நெடு வாயில்
      அதனூடு நனி புக்கார்.

     அன்னது -(அனுமன் முதலிய வானர வீரர்கள்) அத்தன்மை வாய்ந்த;
கன்னி நெடு மா நகரம் -
என்றும் அழிவில்லாத மிகப் பெரிய நகரத்தை;
எதிர் கண்டார் -
கண்ணெதிரே கண்டவர்களாய்;இந்நகர் -இந்த
நகரமானது;இகல் இராவணனது -பகைமையையுடைய இராவணனது;
ஊர்ஆம் என்று உன்னி -
நகரமாகுமென்ற மனத்தில் நினைந்து;
உரையாடினர்-தமக்குள் பேசிக்கொண்டு;உவந்தனர் வியந்தார் -
மகிழ்ச்சியும் வியப்பும்ஒரே சமயத்தில் அடைந்தவர்களாய்;பொன்னின்
நெடுவாயில் அதன் ஊடு-
பொன் மயமான நீண்டு அகன்ற அந்த நகரத்து
வாயிலில்;இனிது புக்கார்-இனிதாக நுழைந்து சென்றார்கள்.

     அந்த நகரத்தை வானர வீரர் கண்டதும் இராவணனது இலங்கையென்று
நினைத்து உடனே சீதையைக் காணலாமென்ற மகிழ்ச்சியோடு உள்ளே