மாதர்களின்;மொழி என்னக் கூவும் -இனிய மழலை போலக் கூவு கின்ற; இள மென்குயில்கள் -இளமையான மென்மை வாய்ந்த குயில் களும்; பூவை- நாகணவாய்ப்பறவைகளும்; கிளி -கிளிகளும்;கோலத்தூவி மட அன்னம்-அழகான சிறகுகளையுடைய இளமை வாய்ந்த அன்னப் பறவைகளும்;உள-உள்ளன;தோகையர்கள் இல்லை -(ஆனால்) மகளிர் மட்டும் (அங்கே)இல்லை. மகளிர் புனல் விளையாட்டுக்கு வேண்டிய வாவியும் பொய்கையும் பூக்கொய்து விளையாடிப் பூஞ்சோலைகளும் பொழுதை இனிதே கழிக்க உதவும் குயில் முதலிய பறவைகளும் அங்கே நிரம்பியிருந்தாலும் அவற்றைக் கண்டு மகிழ்வதற்கும் அனுபவித்துத் திளைப்பதற்கும் உரிய மகளிர்மட்டும் காணப்பெறவில்லையே என்ற இரக்கக் குறிப்பு உடையது இப்பாடல். தோகையர்: உவமையாகு பெயர். 40 | 4561. | ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்: 'மாயைகொல்?' எனக் கருதி, மற்றும் நினைவுற்றார்; 'தீய முன் உடற் பிறவி சென்ற அது அன்றோ, தூயது துறக்கம்?' என நெஞ்சு துணிவுற்றார். |
ஆய நகரத்தின் இயல்பு -அந்த நகரத்தின் தன்மையினை;உள் உற அறிந்தார் -உள்ளே சென்ற வானர வீரர் அறிந்தனர்;'மாயை கொல்' எனக் கருதி -(அழகும் பயனும் நிறைந்தும்) பயன்கொள்வார் எவரும் இலாத (இந்நகரின் நிலை) ஒரு மாயைத் தோற்றமாக இருக்கக் கூடுமோ என் முதலில் நினைத்து;மற்றும் நினைவு உற்றார் -வேறு வகையாகவும் நினைத்தார்கள்; முன் தீய உடற்பிறவி சென்ற அது அன்றோ -முதலில் (பாவத்) தீமையுடைய உடற் பிறவி கழிந்த பின்னிலை அன்றோ;தூயது துறக்கம் - தூய்மையானதாகிய சுவர்க்கம் காண்பது, என நெஞ்சு துணிவுற்றார் -என்று மனத் துணிவு கொண்டனர். பிலத்தினுள் புகுந்து இறங்கி வந்ததனால் 'இந்நகரம் நரக உலகத்ததாயிருக்கலாமோ, இப்படி ஒரு மாயத் தோற்றமாய் உள்ளதே' என்று முதலில் நினைந்தனர். ஆனால், அங்குக் காணப்பெற்ற வனப்பும் வசதியும் நிறைந்த நிலையைக் கண்டு, வேறு வகையாக நினைத்தார்கள்;அதாவது, இது சுவர்க்கமாக இருக்கும் என்று நினைத்தனர். ஆனால், உடற்பிறவி நீங்கிய பிறகுதானே சுவர்க்கம் காண முடியும் என்றும் நெஞ்சத்திலே எண்ணம் எழுந்தது. நரகம் அன்று என முதலில் மறுத்ததால் அடுத்து எழுந்த நினைவைத் 'துணிவு' எனக் கவிஞர் குறித்தார். ஆனால், அத்துணிபு பற்றியும் ஐயம் நிகழ்ந்ததை உடற்பிறவி அழிந்தபின் வரும் நிலையன்றோ சுவர்க்கம் என்ற கேள்வி புலப்படுத்திற்று. இக்கேள்வியில் விளைந்த விளக்கத்தைத் தெளிவுறுத்துவது அடுத்த பாடல். 41 |