பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 599

தோன்றியுள்ள வஞ்சனையால்;காம்பு அனைய தோளியை -இள
மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய சீதையை;ஒளித்த -எடுத்துச்
சென்று மறைத்து வைத்த;படு கள்வன் -பெருந் திருடனான இராவணன்;
நாம் புக அமைத்த -
(சீதையைத் தேடி வரும்) நாம் எல்லோரும்
அகப்பட்டுத் தவிக்குமாறு செய்துவைத்த;பொறி நன்று -சூழ்ச்சி
நன்றாயிருக்கிறது;முடிவு இன்று -(இதற்கு) ஒரு முடிவுமில்லை;ஏம்பல் -
(நமக்குள்ள) ஊக்கமும்;இனி மேலை விதியால் முடியும் -இனிமேல்
முற்பிறப்பில் செய்த தீவினையால் நீங்கிவிடும்;என்றான் -என்று வருந்திக்
கூறினான்.

     'சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் அச்சீதையைத் தேடிவருபவர்
தன்னிடம் வராதபடி வஞ்சனையால் செய்த குழியாகும் இது; நாம் இதில்
சிக்கிக் கொண்டமையால் இனி நமக்கு உய்வில்லை; இதில் அழிந்து ஒழிவதே
விதி' என்றான் சாம்பான்.  சலம்: வஞ்சனை. படு கள்வன்: மிகுதியான திறனும்
கொடுமையும் வாய்ந்த திருடன்.  அறிவு இங்கே சூழ்ச்சி என்ற கருத்தில்
வந்தது.                                                     43

மாருதி சாம்பனைத் தேற்றுதல்

4564.'இன்று, பிலன் இது இடையின்
      ஏற அரிது எனின், பார்
தின்று, சகரர்க்கு அதிகம்
      ஆகி, நனி சேறும்;
அன்று அது எனின்,
      வஞ்சனை அரக்கரை அடங்கக்
கொன்று எழுதும்; அஞ்சல்'
      என மாருதி கொதித்தான்.

     (அந்தச் சாம்பனை நோக்கி) மாருதி -அனுமன்;இன்று இடையின் -
இப்பொழுது நடுவிலுள்ள;பிலன் ஈது -இந்தப் பிலத்திலிருந்து;ஏற அரிது
எனின் -
ஏறி அப்பாலே செல்வது முடியாதென்றால்;சகரர்க்கு நனி அதிகம்
ஆகி -
சகரபுத்திரர்களைக் காட்டிலும் மிக்க வல்லமையுடையவர்களாகி;பார்
தின்று சேறும் -
நிலத்தைக் குடைந்து கொண்டு (மேற்புறமாக ஏறி) அப்பாலே
எளிதாகச் சென்று விடுவோம்;அது அன்று எனின் -அவ்வாறு
இல்லையென்றால்;வஞ்சனை அரக்கரை அடங்க -(இப்படி) நம்மை
வஞ்சித்த அரக்கர்களை யெல்லாம் முழுவதும்;கொன்று எழுதும் -
கொன்றுவிட்டு மேலே எழுந்து செல்வோம்;அஞ்சல் - சற்றும்
பயப்படவேண்டா;எனக் கொதித்தான் -என்று மனம் வெந்து கூறினான்.

     சகரபுத்திரர்களைப் போல நிலத்தைத் தோண்டியாவது,
அரக்கர்களையெல்லாம் அடியோடு அழித்து மேலெழுந்தாவது வெளியே
செல்வோம் என்று அனுமன் மனங் கொதித்துச் சாம்பவானைத் தேற்றினான்
என்பது. யாவரையும் தேற்றவல்ல சாம்பனே கலங்கி விட்டானே என்ற
எண்ணத்தால் மாருதி மனம் கொதித்தது. தின்று - தோண்டி (நிலத்தை) சகரர்
தோண்டலால் சாகரம் என்று கடலுக்குப் பெயர் வந்தது - தத்திதாந்தநாமம்.
                                                           44