பட்டுள்ள; பித்திகை - படித்துறைச் சுவர்களில்; சேர்ந்துழிச் சேர்ந்துழி - படியுந்தொறும் படியுந்தொறும்; நிறத்தைச் சேர்தலால்-அந்தந்த மணிகளின் நிறத்தைப் பெறுவதால்; ஓர்ந்து உணர்வு இல்லவர் - (அப்பொய்கை) பல நூல்களை ஆராய்ந்தும் உண்மைப் பொருளை உணரும் அறிவில்லாதவரின்; உள்ளம் ஒப்பது - மனம் ஒத்து விளங்கியது. பொய்கையின் நீர் தெளிவுமிக்கது என்பதைக் கூற ஈர்ந்த நுண்பளிங்கை உவமையாகக் கூறினார். பளிங்குபோலத் தனக்கென ஒரு நிறமில்லாமல் தெளிந்த பொய்கையின்நீர், தான் சார்ந்த மணிகளின் நிறம் பெற்றமைக்கு, எவர் கூறும் பொருளையும் உண்மைப் பொருளென ஏற்கும் மெய்யறிவில்லார் உள்ளம் உவமை. தெளிந்த புனல் சார்ந்த மணிகளின் நிறத்தைப் பெறுவதாகக் கூறுவதால் 'பிறிதின் குணம் பெறலணி'யுமாம். பளிங்கு, தன்னை அடுத்த பொருளின் நிறம்பெறும் என்பதை 'அடுத்தது காட்டும் பளிங்கு' என்னும் திருக்குறளாலும் (706) அறியலாம். ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.'' என்னும் குறள் (423) உண்மை அறிவின் இலக்கணம் கூறுவதைக் காண்க. ஓர்ந்தும் - உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. இப்பாடல் ஆய்ந்து அறியும் அறிவில்லார் இயல்பைப் பொய்கையுடன் இயைத்துக்கூறுவது. 2 | 3711. | குவால் மணித் தடம்தொறும் பவளக் கோல் இவர் கவான் அரசுஅன்னமும், பெடையும் காண்டலின், தவா நெடு வானகம் தயங்கு மீனொடும், உவா மதி, உலப்பு இல உதித்தது ஒப்பது; |
குவால் மணித் தடம்தொறும்- குவியலாக மணிகளைப் பெற்றிருக்கும் பொய்கையின் இடமெல்லாம்; பவளக்கோல் இவர் கவான் -பவளத்தாலான கோல் போன்ற சிவந்து நீண்ட கால்களையுடைய; அரசு அன்னமும் - அரச அன்னங்களும்; பெடை அன்னமும்-பெண் அன்னங்களும்; காண்டலின் - (சேர்ந்து) காணப்படுவதால்; தவா நெடு வானகம் - அழியாத பெரிய ஆகாயத்திடை; தயங்கு மீனொடு - விளங்குகின்ற விண்மீன்களோடு; உவாமதி உலப்பு இல -அளவற்ற நிறைமதிகள்; உதித்தது ஒப்பது - தோன்றியதைப் போல (அப்பொய்கை) விளங்கியது. அன்னப்பறவைகளில் சிறந்தது அரச அன்னம். காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும் நான்கு பூதங்களுக்கு முன்னர்த் தோன்றி. அவை அழியுமளவும் தான் அழியாமல் இருத்தலால் வானிற்குத் 'தவா' என்னும் அடைமொழி தரப்பட்டது. 'உவாமதி உலப்புஇல' என்பதால் இல்பொருள் உவமை அணி. |