சுயம்பிரபையைச் சீதையோ என ஐயுறுதல் | 4570. | இருந்தனள் - இருந்தவளை எய்தினர் இறைஞ்சா, அருந்ததி எனத் தகைய சீதை அவளாகப் பரிந்தனர்; பதைத்தனர்; 'பணித்த குறி, பண்பின் தெரிந்து உணர்தி; மற்று இவள்கொல், தேவி?' எனலோடும், |
இருந்தனள் -(அவ்வாறு) இருந்தாள்;இருந்தவளை -அப்படி வீற்றிருந்த சுயம்பிரபையை வானரவீரர்கள்;எய்தினர் இறைஞ்சா -அணுகி வணங்கி;அருந்ததி எனத்தகைய சீதை அவளாக -அருந்ததி யென்று சொல்லத் தகுந்த கற்புடைய சீதையாகவே நினைத்து;பரிந்தனர் -(அவளிடம்) அன்பு பூண்டனர்;பதைத்தனர் -பரபரப்பு அடைந்தனர்;இவள் தேவி கொல் -(அனுமனைப் பார்த்து) இவள் சீதைதானா? பணித்த குறி - (இராமன்) கூறிய அங்க அடையாளங்களைக் கொண்டு;பண்பில் தெரிந்து உணர்தி -முறையாக ஆராய்ந்து தெளிந்து அறிவாயாக;எனலோடும் - என்றுகேட்ட அளவில். மாருதி உரைத்தான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும். முன்னர் நகரையும், மாளிகையையும், குகையையும் கண்டு இராவணன் சீதையை ஒளித்த இடம் இவையோயென ஐயுற்ற வீரர்கள் இங்கும் சுயம்பிரபையின் அழகைக் கண்டு அவளைச் சீதையென மயங்கினர் என்பது. சீதையவள்: அவள் - பகுதிப் பொருள் விகுதி. அருந்ததி: வசிட்டரின் மனைவி; கற்புடைப் பெண்களுக்கு உவமை கூறப்படுபவள். இறைஞ்சா: செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். 50 | 4571. | 'எக் குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்? இக் குறியுடைக் கொடி இராமன் மனையாளோ? அக்கு வடம், முத்தமணி ஆரம்அதன் நேர் நின்று ஒக்கும்எனின், ஒக்கும்' என, மாருதி உரைத்தான். |
மாருதி -அனுமன் (அந்த வீரர்களை நோக்கி);எக்குறியொடு எக்குணம் -(சீதைக்குரிய உறுப்பிலக்கணங்களிலும் குணங்களிலும்) எந்த அடையாளத்தை அல்லது எந்தக் குணத்தை;இவண் எடுத்து இசைக்கேன் - இவளிடம் இருப்பதாக எடுத்துச் சொல்வேன்? இக்குறி |