| சீதையை ஒளித்தனர்; மறைத்த புரை தேர்வுற்று ஏதம் இல் அறத் துறை நிறுத்திய இராமன் தூதர்; உலகில் திரிதும்' என்னும் உரை சொன்னார். |
வேதனை அரக்கர் -(உலகத்தார்க்குத்) துன்பமே தரும் அரக்கர்கள்; ஒரு மாயை விளைவித்தார் -ஒரு வஞ்சகச் செயலைச் செய்தனர்; சீதையை ஒளித்தனர் -சீதையை எடுத்துச் சென்று மறைத்துவிட்டார்கள்;ஏதம் இல் - குற்றம் நீங்கிய;அறத்துறை நிறுத்திய -தரும நெறியை நிலைபெறச் செய்த; இராமன் தூதர் -இராமன் தூதுவர்கள் நாங்கள்;மறைத்த புரை தேர்வுற்று -(அந்த அரக்கர்கள் சீதையை) ஒளித்து வைத்துள்ள மறைவிடங்களைத் தேடத்தொடங்கி;உலகில் திரிதும் -உலகில் அலைந்து திரிகின்றோம்; என்னும் - என்கின்ற;உரை சொன்னார் -மறுமொழியைக் கூறினார். புரை: மறைவான உறைவிடம். 53 4574. | என்றலும், இருந்தவள் எழுந்தனள், இரங்கி, குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்; நன்று வரவு ஆக! நடனம் புரிவல்' என்னா, நின்றனள்; நெடுங் கண் இணை நீர் கலுழி கொள்ள, |
என்றலும் -என்று வானரர் கூறியவுடனே;இருந்தவள் - வீற்றிருந்தவளாகிய அந்தச் சுயம்பிரபை;எழுந்தனள் -எழுந்துநின்று;இரங்கி -(அந்த இராமதூதரிடம்) அன்பு கொண்டு;குன்று அனையது ஆயது - மலையையொத்ததாகிய;ஒரு பேர் உவகை கொண்டாள் -ஒப்பற்ற பெரு மகிழ்ச்சியையடைந்தாள்;வரவு நன்று ஆக -(வானரர் களைப் பார்த்து) உங்கள் வரவு நல்வரவு ஆகுக;நடனம் புரிவல் -ஆனந்தக் கூத்தாடுவேன்; என்னா -என்று சொல்லி;நெடுங்கண் இணை -(தன்) நீண்ட இரு கண்களிலிருந்தும்;நீர் கலுழி கொள்ள -ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாகப் பெருக;நின்றனள் -நின்றாள். இந்த வானரவீரர்களை இராமதூதர் என்று அறிந்தவுடன் சுயம்பிரபை தனது சாபம் நீங்குங்காலம் நெருங்கியதென்ற காரணத்தால் அவர்கள்மீது அன்பு பாராட்டி, வரவு கேட்டறிந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிய மகிழ்ச்சியால் நடனம் செய்யலானாள் என்பது. |