தானவன்: காசியப முனிவரின் மனைவியருள் தனு என்பவளின்வழி வந்தவன்; தானவர் ஓர் அரக்க இனத்தவராவர். தானவன என்றது மயனையும் நன்னுதலினாள் என்றது ஏமை என்பவளையும் குறிக்கும் வான்மீகம். அசுரத் தச்சனான மயன் தான் புரிந்த தவப்பயனாகப் பிரமனிடமிருந்து அசுரகுருவான சுக்கிராச்சாரியின் பொருள் முழுவதையும் பெற்றுப் பொன்மயமான வனத்தை உருவாக்கினான் என்றும், பின்னர் அது அந்த மயனால் காதலிக்கப்பட்ட தேவமாதுக்கு உரியதாயிற்று என்றும் கூறும். இச்செய்யுள் முதல் 63 முடிய அந்தாதித் தொடையாக அமைந்துள்ளமை காண்க. 59 4580. | 'புணர்ந்து, அவளும் அன்னவனும், அன்றில் விழை போகத்து உணர்ந்திலர், நெடும் பகல் இம் மா நகர் உறைந்தார்; கணங் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று, இணங்கி வரு பாசமுடையேன் உடன் இருந்தேன். |
அவளும் அன்னவனும் -அந்தத் தேவமாதும், அந்த மயனும்; புணர்ந்து -கூடி (இன்பம் துய்த்து);அன்றில் விழை போகத்து -அன்றில் பறவையும் விரும்பும்படியான சிற்றின்பத்தில்;உணர்ந்திலர் - (வேறொன்றையும்) அறியாதவர்களாய்;நெடும்பகல் இம்மாநகர் -பலகாலம் இந்தப் பெரிய நகரத்தில்;உறைந்தார் -வசித்தார்கள்; கணங்குழையினாளொடு -திரண்ட காதணி பூண்ட அப் பெண்ணுடன்;உயர் காதல் ஒருவாது -சிறந்த அன்பு நீங்காது;உற்று இணங்கி வரு - நெருங்கிப் பழகி வருகின்ற;பாசம் உடையேன் -பாசமுடையவளாகிய நான்; உடன் இருந்தேன் -அந்தப் பெண்ணோடு இங்கேயே இருந்துவிட்டேன். மயனும், தேவமாதும் சிற்றின்பத்தில் மூழ்கி இங்கு வசிக்குங் காலத்தில் என் உயிர்த்தோழியான அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும் அவளுடன் இருந்தேன் என்றாள் சுயம்பிரபை. பகல்: நாள்கள் - இலக்கணை. காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பமாதலின் 'உயர் காதல்' எனப்பட்டது. 60 4581. | 'இருந்து பல நாள் கழியும் எல்லையினில், நல்லோய்! திருந்திழையை நாடி வரு தேவர்இறை சீறி, பெருந் திறலினானை உயிர் உண்டு, ''பிழை'' என்று, அம் முருந்து நிகர் மூரல் நகையாளையும், முனிந்தான். |
|