பக்கம் எண் :

610கிட்கிந்தா காண்டம்

     நல்லோய் -நல்ல பண்புகள் உடையவனே;இருந்து -(இவ்வாறு
அவர்கள் இருவரும்) கூடியிருந்து;பல நாள் கழியும் எல்லையினில் -
பலநாள்கள் கழியும் பொழுதில்;திருந்து இழையை நாடி வரு -
வேலைப்பாடு மிக்க அணிகளைப் பூண்ட அந்தத் தேவமாதைத் தேடி
வருகின்ற;தேவர் இறை -தேவர் தலைவனாகிய இந்திரன்;சீறி -கோபித்து;
பெருந் திறலினானை -
மிக்க வல்லமை பொருந்திய அந்த மயனை;உயிர்
உண்டு -
கொன்று;அம்முருந்து நிகர் -அழகான மயிலிறகின்
அடிக்குருத்தையொத்த;மூரல் நகையாளையும் -பற்களையும்
புன்சிரிப்பையுமுடைய அந்தத் தெய்வப் பெண்ணையும்;பிழை என்று -(நீ
செய்தது) தவறான செயலாகும் என்று;முனிந்தான் -சினந்து கூறினான்.

     இவ்வாறு அவ் விருவரும் இந்த நகரத்தில் இன்பம் நுகர்ந்து பலநாட்கள்
கழிக்க, வானுகலத்தில் அத்தேவமாதைக் காணாமையால் அவளைத் தேடி வந்த
இந்திரன், அந்த ஏமையைக் கவர்ந்த காரணத்தால் அம் மயனைக் கொன்று,
அவனுக்கு இணங்கிய அந்த ஏமையைக் கோபித்தான் என்பது. திருந்திழை:
வினைத்தொகையன்மொழி.  முருந்து: மயிலிறகின்அடி - பற்களுக்கு உவமை.
                                                            61

4582.'முனிந்து, அவளை, ''உற்ற செயல்
     முற்றும் மொழிக'' என்ன,
கனிந்த துவர் வாயவளும்
      என்னை, ''இவள்கண் ஆய்,
வனைந்து முடிவுற்றது'' என,
      மன்னனும், இது எல்லாம்
நினைந்து, ''இவண் இருத்தி; நகர்
     காவல் நின்னது'' என்றான்.

     அவளை முனிந்து -(அந்தத் தேவமாதை இந்திரன்) அவ்வாறு
கோபித்து;உற்ற செயல் முற்றும் மொழிக -நடந்த நிகழ்ச்சிகள்
அனைத்தையும் கூறுக;என்ன -என்று கட்டளையிட;கனிந்த துவர்
வாயவளும் -
நன்றாக முற்றிய பவழம்போன்ற இதழையுடைய அந்த
ஏமையும்;என்னை -என்னைப் பற்றிக் கொண்டு;இவள் கண்ணாய்
வனைந்து -
இவளால் (இப்பழிப்புச் செயல்) தொடுக்கப்பட்டு;முடிவுற்றது
என -
முடிந்ததெனத் தெரிவிக்க;மன்னனும் -இந்திரனும்;இது எல்லாம்
நினைந்து -
இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து (என்னைப் பார்த்து);
இவண் இருத்தி -
இந்த நகரிலேயே (தனியாக) தங்குவாய்;நகர் காவல்
நினது -
நகரத்தைப் பாதுகாக்கும் வேலை உன்னுடையது;என்றான் -என்று
கூறினான்.

     நடந்த செயலை என் தோழியாலறிந்த இந்திரன் எல்லாவற்றிற்கும் முதற்
காரணம் நானே எனத் தெளிந்து என்மீதுள்ள கோபத்தால் ஒருவருமில்லாத
இந்த நகரத்தைப் பாதுகாத்துத் தனியே இருக்குமாறு கட்டளையிட்டான்
என்பது.  மன்னன்: இந்திரன். 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' - தொல்.
பொருள்.                                                   5.62