| சென்னியின் வணங்கி, 'நனி வானவர்கள் சேரும் பொன்னுலகம் ஈகுவல், நினக்கு' எனல் புகன்றான். |
சுயம்பிரபை -சுயம்பிரபை;அன்னது கூற - அவ்வாறான சொற்களைச் சொல்ல;அனுமானும் -அனுமனும்;மன்னு புலன் வென்று வரு - பொருந்திய ஐம்புலன்களையும் வெற்றி கொண்ட;மாதுஅவள் மலர்த்தாள் - அந்தப் பெண்ணின் தாமரை மலர் போன்ற அடிகளை;சென்னியின் வணங்கி-தலையால் வணங்கி;நினக்கு -உனக்கு;வானவர்கள் நனி சேரும் -தேவர்கள் மிகுதியாகக் கூடி நிற்கும்;பொன்னுலகம் ஈகுவல் - பொன்மயமான தேவருலகத்தை அளிப்பேன்;எனல் புகன்றான் -என்று சொன்னான். மேலுலக நெறியைக் காட்டுமாறு வேண்டிய சுயம்பிரபைக்கு, அவ்வாறே செய்வதாக அனுமன் வாக்களித்தான் என்பது. புலன்களை வென்று தவம் செய்தவாறு அனுமன், அவள் திருவடியை வணங்கினான். 66 இருளிலிருந்து விடுதலை பெறுவதற்கு உரியதைச் செய்யுமாறு அனுமனை வானரர் வேண்டுதல் 4587. | 'முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப் பிழைத்து உயிர் உயிர்க்க அருள் செய்த பெரியோனே! இழைத்தி, செயல் ஆய வினை' என்றனர் இரந்தார்; வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான், |
முழைத்தலை -(மற்றைய வானரவீரர் அனுமனை நோக்கி) இந்தப் பிலத்துவாரத்தில்;இருட்கடலில் மூழ்கி -இருளாகிய கடலில் மூழ்கி; முடிவேமை -இறக்க வேண்டிய எங்களை;உயிர் பிழைத்து உயிர்க்க - இறவாமல் தப்பி வாழும்படி;அருள் செய்த -கருணை புரிந்த;பெரியோனை -பெருமைக் குணமுடையவனே! செயல் ஆயவினை -இனிச் செய்யத்தக்க செயலை;இழைத்தி -செய்வாய்;என்றனர் இரந்தார் -என்று பணிந்து வேண்டினார்கள்;வழுத்த அரிய மாருதியும் -புகழ்ந்து கூறமுடியாத (மிக்க நற்குணங்களையுடை) அனுமனும்;அன்னது வலிப்பான் -அவ்வாறே செய்வதற்கு மனத்தினில் உறுதிகொண்டான். இந்தப் பிலத்துள் சீதைஇல்லையென்பது தெளிவாக விளங்க, இனி இங்கிருப்பதால் எவ்விதப் பயனுமில்லையாதலால் உடனே வெளியே செல்வதற்குரிய செயலை நாடவேண்டுமென்று அனுமனை மற்றை வானரர் வேண்டிக்கொள்ள, |