தசநவப் பெயர் -(அந்த வானர வீரர்கள்) தசநவம் என்ற பெய ரையுடைய;சரள சண்பகத்து -இனிய சண்பக மரங்களையுடையதும்;அசந அப்புலத்து அகணி -உணவையுண்டாக்கும் அழகிய விளை நிலங்களைக் கொண்ட மருத நிலங்களையுடையதுமாகிய;நாடு ஒரீஇ -வளநாட்டை விட்டு நீங்கி;உசநவப் பெயர்க் கவி உதித்த -உசுநஸ் என்னும் பெயரையுடைய சுக்கிரீவன் பிறந்த;பேர் இசை விதர்ப்ப நாடு -பெரும்புகழ் வாய்ந்த விதர்ப்பம் என்னும் நாட்டை;எளிதின் எய்தினார் -எளிதாகச் சென்று சேர்ந்தார்கள். தச நவம் (தசார்ணவம்) என்னும் நாடு சண்பகமரத் தொகுதிகளையும், நல்ல விளைச்சலைக் கொண்ட புலங்களையுமுடையது என்பது. சரளம்: இனிமை. அகணி: மருதநிலம். ஒருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது. ஒரீஇ - சொல்லிசையளபெடை. உசநவன்: சுக்கிரீவன் பெயர்களுள் ஒன்று. 16 விதர்ப்ப நாட்டில் தேடுதல் 4610. | வைதருப்ப மண்டலனில் வந்து புக்கு, எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்; பெய் தருப்பை நூல் பிறழும் மேனியார், செய் தவத்துளார் வடிவின், தேடினார். |
வைதருப்ப மண்டலனில் -(வானர வீரர்கள்) விதர்ப்பம் என்னும் நாட்டில்;வந்து புக்கு -வந்து சேர்ந்து;எய்து அருப்பம் அத்தனையும் - (அந்த நாட்டில்) பொருந்தின ஊர்கள் எல்லாவற்றையும்;எய்தினார் - அடைந்தனர்;பெய் தருப்பை நூல் -பூண்டுள்ள தருப்பைகளினாலும், (மார்பிலணிந்துள்ள) பூணூலினாலும்;பிறழும் மேனியார் -விளங்கும் உடம்பையுடையவர்களாகிய;செய் தவத்துளார் வடிவின் - தவம் செய்யும் முனிவரது வடிவைக் கொண்டு;தேடினார் -சீதையைத் தேடினார்கள். விதர்ப்ப நாட்டையடைந்த வானர வீரர்கள் முனிவரது வடிவுகொண்டு அங்குள்ள ஓரூரையும்விடாது புகுந்து சென்று சீதையைத் தேடினார்கள் என்பது. மனிதர்கள் வாழும் ஊர்களில் சென்று வானர வடிவுடன் தேடுதல் இயலாதாகையால் விரும்பும் உருவம் கொள்ளும் அவ் வானர வீரர் விதர்ப்ப நாட்டு ஊர்களில் சென்று தேடுகையில் சிறப்பு மிக்கதாய், ஐயத்திற்குச் சிறிதும் இடந்தராத முனிவரது வடிவைக் கொண்டனர் என்பது அறியத் தக்கது. வைதருப்பம்: தத்தி தாந்த நாமம். தருப்பை - தருப்பைப் புல்லால் திரித்த ஒரு கயிறு; - இது முஞ்சி எனப்படும் அந்தணப் பிரமசாரிகள் முஞ்சியும் பூணூலும் தரிப்பர். மண்டலம் - மண்டலன் (மண்தலன்) - ஈற்றுப்போலி. 17 தண்டக வனத்தில் தேடிப் பார்த்த பின், முண்டகத் துறையை அடைதல் 4611. | அன்ன தன்மையால், அறிஞர் நாடி, அச் செந் நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ, |
|