| | தன்னை எண்ணும் அத் தகை புகுந்துளார் துன்னு, தண்டகம் கடிது துன்னினார். |
அறிஞர் -அறிவாளர்களான அந்த வானர வீரர்;அன்ன தன் மையால் -அவ்விதமாக;நாடி -சீதையை அங்கே தேடிப் பார்த்து;அச் செந்நெல் வேலி சூழ் -செந் நெற் பயிர்கள் விளையும் வயல்கள் சூழ்ந்த; திரு நல் நாடு ஒரீஇ -சிறந்த அழகான அந்த விதர்ப்ப நாட்டை விட்டு நீங்கி;தன்னை எண்ணும் -சீவான்மாவாகிய உயிரின் இயல்பை அறிந்திருக்கின்ற;அத்தகை புகுந்துளார் -அத் தன்மை பொருந்திய வரான முனிவர்கள்;துன்னு தண்டகம் -நிறைந்து வாழும் தண்டகா ரணியத்தை; கடிது துன்னினார் -விரைவாகச் சென்று சேர்ந்தார்கள். தன்னையெண்ணும் அத்தகை புகுந்துளார் சீவான்ம சொரூபத்தை உள்ள படியுணர்ந்து காணவல்ல யோகியர். திருநல்நாடு: கணடார் தங்கியிருந்து வாழ விரும்பும் அழகியநாடு. தண்டக வனம்: இட்சுவாகு வம்சத்தில் தோன்றித் தன் தீய நடத்தையால் நாடு கடத்தப் பெற்ற தண்டகன் என்னும் அரசகுமாரனால் தெற்கே அமைக்கப்பெற்று ஆளப்பெற்றதும், பின்பு சுக்கிராச்சாரியார் சாபத்தால் கொடிய வனமானதும் பல முனிவர்கள் தவ நியமத்தில் வாழ்ந்து வந்ததுமான ஓர் இடம். இவ் வனத்திலேதான் இராமன் சீதையோடும், இலக்குவனோடும் பல ஆண்டுகள்தங்கியிருந்தான். 18 | 4612. | உண்டு, அகத்துளார், உறையும் ஐம் பொறிக் கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார், தண்டகத்தையும் தடவி ஏகினார்; முண்டகத்துறை கடிது முற்றினார். |
உண்டு அகத்துள் ஆர் உறையும் -புலன்களைத் துய்த்துக் கொண்டு உடம்பினுள் பொருந்தி வசிக்கின்ற;ஐம் பொறிக் கண்ட கர்க்கு -ஐந்து இந்திரிய உணர்ச்சிகளாகிய (முள் போன்ற) கொடியவர்களுக்கு;அருங் காலன் ஆயினார் -கொடிய யமன் போன்றவர்களாகிய முனிவர்கள் வசிக்கின்ற; தண்டகத்தையும் தடவி -அந்தத் தண்டக வனத்தையும் தேடிப் பார்த்து; ஏகினார் -(அங்கும் சீதையைக் காணாமல்) அந்த இடத்தை விட்டு நீங்கிய அவ் வானர வீரர்கள்;முண்டகத் துறை -முண்டகத் துறை யென்னும் இடத்தை;கடிது முற்றினார் -விரைவாகச் சென்று சேர்ந்தார்கள். ஐம்பொறிகள், ஆன்மாவை நற்கதியில் சேரவொட்டாது துன்புறுத்து வதால் அவற்றைக் 'கண்டகர்' என்றார். கண்டகர்: முள்போன்ற கொடியோர். ஐம்பொறிக் கண்டகர்க்கு அருங்காலனாயினார்: ஐம்பொறிகளுக்குக் கூற்றுவன் ஆனவர். அஃதாவது, மனத்தை நல்வழியிற் செல்லவொட்டாது தடுத்து ஐம்புலன்களிற் செல்லுமாறு இழுக்கின்ற ஐம்பொறிகளை அவ்வாறு செய்யவொட்டாது தடுத்துத் தம் வசமாக்கி மனத்தைச் சீவான்மா பரமான்மா தியானங்களில் செலுத்தும் வல்லமையுடையவர்; ஜிதேந்திரியர் எனப்படுவர். முண்டகத் துறை: தாமரை முதலிய பூக்கள் நிறைந்து விளங்கும் நீர்த் துறையையுடைய ஒருசூழல். 19 |