அவதரித்தவன் ஆதலின் 'ஆலம் உண்டவனின் நின்று' என்றார். முன்னரும் அனுமனைத் 'தனி அருளும் தாழ்சடைக் கடவுள்' (3753) எனக் கூறியது காண்க. வாலி இதுவரை போரில் வென்று வெற்றிமாலைக்கு உரியவன் ஆதலின் 'விரை செய் தார் வாலி' என்றான். சுக்கிரீவன் முதலானாரோடு போர்செய்யத் தும்பை சூடி வருதலின் 'விரை செய் தார் வாலி' எனவும் கொள்ளலாம். தன்னோடு போர்செய்வாரின் வலிமையில் பாதியைத் தன் வலிமையோடு பெற்றுவிடுவான் ஆதலின் 'அளவிலா வலியினான்' எனப்பட்டான். வாலி பிறந்தபோது, இந்திரன் வந்து பொன்மாலையை அணிவித்து, யார் எதிர்த்தாலும் எதிர்த்தார். வலிமையில் பாதி வாலிக்கு வருவதாக என வரம் அளித்தான் என்பது கதை. 'வாலி என்ற அளவு இல் ஆற்றல் வன்மையான்' (10124) என மேல் வருதலும் காண்க. காலன் - உவமை ஆகுபெயராய் இராமனை உணர்த்திற்று. இடர்க்கடல்- உருவகம். 2 | 3788. | 'மண்உளார், விண்உளார், மாறு உளார், வேறு உளார், எண் உளார், இயல் உளார், இசை உளார், திசை உளார், கண் உளார் ஆயினார்; பகை உளார், கழி நெடும் புண்உளார், ஆர் உயிர்க்கு அமுதமேபோல் உளார். |
மண் உளார் - (இராமலக்குவர்) மண்ணுலகத்தில் உள்ள மனிதர்களும்; விண் உளார் - விண்ணுலகத்துள்ளோராகிய தேவர்களும்;மாறு உளார் - இவ்விரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்து நாகரும்;வேறு உளார் -அவற்றிற்கும் வேறான உலகங்களில் இருப்பவர்களும்;திசை உளார்-எட்டுத்திசையிலும் உள்ளவர்களும்;எண் உளார் - (ஆகிய இவர்களின்)மனத்தில் உள்ளவர்களும்;இயல் உளார் -செயலிலே இருப்பவர்களும்;இசை உளார் -சொல்லிலே உள்ளவர்களும்;கண் உளார் ஆயினார் -கண்ணிலே இருப்பவர்களும் ஆவார்கள்;பகை உளார் - தமக்குப்பகைவர்களே உடையவர்களும்;கழிநெடும் புண் உளார் - அப்பகைவர்களால் உண்டாக்கப்பட்ட மிகப்பெரிய புண்களை உடையவர்களுமாய்;ஆர் உயிர்க்கு - தம்மை அடைந்தவர்களின் அரிய உயிர்க்கு;அமுதமே போல் உளார் -அமிழ்தத்தைப் போன்றவரும் ஆவர். இராமலக்குவரின் தெய்வத்தன்மையும் வீரமும் கருணையும் இப்பாடலில் உணர்த்தப்பட்டன. 'மண் உளார், விண் உளார், மாறு உளார், வேறு உளார், எண் உளார், இயல் உளார், இசை உளார், திசை உளார்' என்றதால் இராமலக்குவரின் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தெய்வத்தன்மை விளங்கும். 'பகை உளார், புண் உளார் ஆர்உயிர்க்கு அமுதமே போல் உளார்' என்றதால் அவர்கள் தம்மை அடைந்தோரின் பகையழித்துக் காக்கும் வீரமும், கருணையும் புலனாகின்றன. 'கண்ணுளார்' என்றது உறுப்புக்களில் சிறந்ததாகிய கண்ணுள் இருப்பவர் |