4613. | அள்ளல் நீர் எலாம், அமரர் மாதரார், கொள்ளை மா முலைக் கலவை, கோதையின் கள்ளு, நாறலின், கமல வேலி வாழ் புள்ளும், மீன் உணா, புலவு தீர்தலால் |
அள்ளல் நீர் எலாம் -(அந்த முண்டகத் துறையில்) சேற்றோடு கலந்த நீரெல்லாம்;அமரர் மாதரார் -அங்கு வந்து நீராடும் தேவ மாதர்களின்; கொள்ளை மா முலை -மிகப் பெரிய முலைகளில் பூசப் பட்ட;கலவை - மிகுதியான கலவைச் சாந்தும் கலத்தலால்;கோதை யின் கள்ளு நாறலின் - மலர் மாலைகளும் நறுமணம் கமழப் பெற்ற மையால்;கமல வேலி வாழ் - அந்த முண்டகத் துறையில் வசித்துவந்த;புள்ளும் -பறவைகளும்;புலவு தீர்தலால் -(மீன்களின் மேலுள்ள) புலால் நாற்றம் நீங்கியதால்;மீண் உணா-அம்மீன்களைப் புசிப்ப தில்லை. அந்த முண்டகத் துறையில் வந்து நீராடுகின்ற தேவமாதர்களின் முலைகளில் பூசியிருந்தத கலவைச் சந்தனமும், மலர் மாலைகளும் அந்நீர்த் துறையில்படிதலால், அங்குள்ள மீன்களும் அந்தக் கலவை, மலர்களின் நறுமணத்தை அடைந்து தமது புலால் வாசனை நீங்கப் பெறுகின்றன. அதனால் அங்கு வாழும் நாரை முதலிய நீர்ப் பறவைகள் புலால் மணம் கமழாத அம் மீன்களை உண்ணமாட்டா என்பது. அம் முண்டகத்துறை திரள்திரளாகத் தேவமாதர் பலர் வந்து படியப் பெற்ற சிறப்பு வாய்ந்தது. கொள்ளை - மிகுதி; கமலவேலி - முண்டகத்துறை; 20 4614. | குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் - விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார், நஞ்சு, வீணையின் நடத்து பாடலான், அஞ்சுவார், கணீர் அருவி ஆறுஅரோ! |
விஞ்சை மன்னர்பால் -வித்தியாதர மன்னரிடத்து;விரக மங்கை மார்-தாம் கொண்ட பிரிவுத் துயரால் வேதனைப்படுகின்ற வித்தியாதர மகளிர்;வீணையின் நடத்து -வீணைகளைக் கொண்டு பிறர் பாடும்; பாடலான் -இசைப் பாட்டினால்;நஞ்சு அஞ்சுவார் -மனம் நைந்து நடுங்குவார்கள்;கண்நீர் அருவி ஆறு -(அவ்வாறு நடுங்குவதால் அவர்கள் சொரியும்) கண்ணீர்அருவிபோல் பெருகும் ஆற்றில்;குஞ்சரம் குடைந்து -யானைகள் அமிழ்ந்துமூழ்கி;ஒழுகும் கொட்பு அது -நீராடும் தன்மையுடையது (அந்த முண்டகத்துறை). ஆல், அரோ: ஈற்றசை. தத்தம் கணவரைப் பிரிந்த வித்தியாதர மகளிர், தம்மைப் போலப் பிரிவில்லாத மகளிர் மனக் கிளர்ச்சியோடு வீணைகளைக் கொண்டு பாடும் பாடலைக் கேட்டு வருந்தி விரக வேதனையுற்று மனம் நடுங்கிக் கண்ணீர் சிந்துவார்கள்; அக் கண்ணீர்ப் பெருக்கு யானைகளும் அமிழ்ந்து மூழ்கும் பெரிய நீர்ப் பெருக்காகும் என்பது. தொடர்புயர்வு நவிற்சியணி. விஞ்சை மன்னர்; காமநூல்களைக் கற்றுத் தேர்ந்த வித்தியாதர ஆடவர். கணீர் - இடைக்குறை (கண்ணீர்) 21 |