பக்கம் எண் :

ஆறு செல் படலம் 631

4615. கமுக வார் நெடுங் கனக ஊசலில்,
குமுத வாயினார், குயிலை ஏசுவார்;
சமுக வாளியும், தனுவும் வாள் முகத்து
அமுத பாடலார், மருவி ஆடுவார்.

     குமுத வாயினார் -செவ்வாம்பல் மலர் போன்ற வாயையுடை
யவர்களும்;குயிலை ஏசுவார் -(தமது குரலால்) குயிலைப் பழிப் பவர்களும்;
சமுக வாளியும் -
கூட்டமான அம்புகள் போன்ற கண் களையும்;தனுவும் -
வில்லைப் போன்ற புருவங்களையும் கொண்ட;வாள் முகத்து -ஒளி
பொருந்திய முகங்களையுடைய;அமுத பாடலார் -அமிழ்தம் போன்ற இனிய
பாடல்களைப் பாடுகின்றவர்களான மகளிர்;கமுக வார் நெடுங் கனக
ஊசலில் -
பாக்கு மரங்களில் கட்டப்பட்ட நீண்ட பொன்னூஞ்சல்களில்;
மருவி ஆடுவார் -
பொருந்தி ஆடி மகிழ்வார்கள்.

     அங்கே பாக்குமரங்களில் கட்டப்பட்டுள்ள பொன்னூஞ்சல்களில் மகளிர்
மனமகிழ்ந்து ஆடுவாரென அந்த இடத்தின் அமைதியான சூழல் வருணிக்கப்
பெற்றது. தனு: மகளிர் புருவத்திற்கு வடிவம் தொழிலும் பற்றிய உவமை.
வாளி, தனு: உவமவாகு பெயர்கள்.  உருவக உயர்வுநவிற்சியணி.       22

4616. இனைய ஆய ஒண்  துறையை எய்தினார்;
நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்;
வினைய வார் குழல் திருவை மேவலார்;
புனையும் நோயினார், கடிது போயினார்.

     இனைய ஆய -இத் தன்மையதான;ஒண் துறையை -அழகிய
முண்டகத் துறையை;எய்தினார் -அடைந்தனர்;நினையும் வேலை வாய் -
நினைக்கும் நேரத்திற்குள்;நெடிது தேடுவார் -வெகுதூரமாகத் தேடினர்;
வினைய வார் குழல் திருவை -
ஐவகையாக அணி செய்யத் தக்க நீண்ட
கூந்தலையுடைய திருமகளான சீதையை;மேவலார் -காணப்பெறாமல்;
புனையும் நோயினார் -
அதனால் ஏற்பட்ட துன்பத்தையுடையவராய்;கடிது
போயினார் -
விரைவாக (அப்பால் தேடச்) சென்றார்கள்.

     முண்டகத் துறை முழுவதும் சீதையைத் தேடி அங்குக் காணாமையால்
வானர வீரர்கள் அப்பாற் செல்லலாயினர் என்பது.  வினைய வார்குழல்: முடி,
குழல், தொங்கல், பனிச்சை, சுருள் ஆகிய ஐவகைத் தொழிலுக்குரிய கூந்தல்.
வேலை - வேளை என்பதன் திரிபு.                              23

பாண்டு மலையின் சிகரத்தை வானரர் அடைதல்

4617. நீண்ட மேனியான், நெடிய தாளின்நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்,
பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத்
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார்.