சீதையைக் காணாமையால் வானரர் வருந்துதல் 4650. | யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்; பூ வரு புரி குழல், பொரு இல் கற்புடைத் தேவியைக் காண்கிலார், செய்வது ஓர்கிலார், நா உறக் குழறிட நவில்கின்றார்அரோ: * |
யாவரும் -வானர வீரர் எல்லோரும்;அவ்வயின் எளிதின் எய் தினார் -அந்த இடத்திற்கு எளிதாக வந்து சேர்ந்தனர்;பூ வரு புரிகுழல் - தாமரை மலரில் தோன்றிய (இலக்குமியின் அவதாரமான) சுருண்ட கூந்தலையும்;பொருவு இல் கற்புடைய -ஒப்பில்லாத கற்புத் தன்மையும் கொண்ட;தேவியைக் காண்கிலார் -சீதையைக் காணாமல்;செய்வது ஓர்கிலார் -இனிமேல் செய்ய வேண்டியது (இன்னதென்று) அறியாதவர்களாய்;நா உறக் குழறிட -நாக்கு மிகவும் குழற; நவில்கின்றார்-பேசலானார்கள். பூவரு: மலரைச் சூடிய என்றும், பூமியிலிருந்து தோன்றிய என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம். காண்கிலார், ஓர்கிலார் - எதிர்மறை முற்றெச்சங்கள். 3 4651. | 'அற்றது நாள் வரை அவதி; காட்சியும் உற்றிலம்; இராகவன் உயிரும் பொன்றுமால்; கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்; இற்றது நம் செயல், இனி' என்று எண்ணினார். |
வரை நாள் அவதி -(அரசன் நமக்கு) குறித்த தவணையும்;அற்றது - முடிந்து விட்டது;காட்சியும் உற்றிலம் -சீதையைக் காணுகின்ற காட்சியையும் நாம் பெறவில்லை;இராகவன் உயிரும் -(இதையறிந்தால்) இராமனது உயிரும்;பொன்றும் -அழிந்துவிடும்;கொற்றவன் ஆணையும் -அரசனது கட்டளையும்;குறித்து நின்றனம் -மனத்திற் குறித்து நின்றோம்;இனி நம் செயல் இற்றது -இனிமேல் நாம் செய்யக் கூடிய செயலும் இல்லை;என்று எண்ணினார் -என்று கூறி (அந்த வானர வீரர்கள்) பலவாறு சிந்தித்தார்கள். கொற்றவன் ஆணை குறித்தது. முப்பது நாட்கள் கடந்தால் தமக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தால் ஆகும். நம் செயல் இற்றது: தெளிவு பற்றிய காலவழுவமைதி. 4 |