| | கால்இயல் பொடியினால், நெடிய கற் படிவம் ஆம் ஆலிகைக்கு, அரிய பேர் உரு அளித்தருளினான். |
வேல் இகல் சினவு தாடகை - (அவ்விருவருள் முன்னவனாம் இராமன்) சூலாயுதத்தை ஏந்தி மாறுபட்டவளாய்ச் சினந்து வருகின்ற தாடகை; விளிந்து உருள -இறந்து தரையில் உருளுமாறு;வில் கோலி -வில்லை வளைத்து;அக்கொடுமையாள்- அக்கொடியவளின்;புதல்வனைக் கொன்று- மகனான சுபாகுவைக் கொன்று;தன்கால் இயல் பொடியினால்- தன் கால்களில் பொருந்திய தூளியினால்;நெடிய கல் படிவம் ஆம்-நீண்ட கல் வடிவமாகக்கிடந்த;ஆலிகைக்கு - அகலிகைக்கு;அரிய பேர் உரு - பெறுதற்கரிய சிறந்த உருவத்தை;அளித்து அருளினான்-கொடுத்து அருள் செய்தான். 'நல்லுறுப்பு அமையும் நம்பியரில் முன்னவர்' என அடுத்த பாடலில் வருவது இடைநிலை விளக்காய் இப்பாடலுக்கு எழுவாயாய் நின்றது. 6 | 3792. | 'நல்உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் - நயந்து, எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர்க் கடவுள்தன் பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் வில் இறுத்தருளினான் - மிதிலை புக்க அனைய நாள். |
நல் உறுப்பு அமையும் -நல்ல உறுப்பிலக்கணம் அமைந்த;நம்பி யரில் முன்னவன் -அவ்ஆண் மக்களுள் முன் பிறந்தவனான இராமன்; மிதிலை புக்க அனைய நாள் -மிதிலை நகரத்துள் புகுந்த அந்த நாளில்; எல் உறுப்பு -ஒளி வீசும் கதிர்களை உறுப்பாக உடைய;அரிய பேரி எழுசுடர்க் கடவுள்தன் -அரிய பெரிய சூரிய பகவானின்;பல் இறுத்தவன்-பற்களை உதிர்த்தவனாகிய சிவபிரானின்;வலிக்கு அமை - வலிமைக்குஏற்ப அமைந்த;தியம்பகம் எனும்வில் -'திரியம்பகம்' என்று சொல்லப்பெறும் வில்லை;நயந்து -(வளைக்க) விரும்பி;இறுத்து அருளினான் -ஒடித்து அருளினான். அரச குமாரர்களுக்கு ஏற்ற உறுப்பிலக்கணம் பெற்றவராதலின் 'நல் உறுப்பு அமையும் நம்பியர்' என்றார். ஆடவரில் சிறந்தோர் 'நம்பியர்' எனப்படுவர். எரிசுடர்க்கடவுள் பல்லிறுத்தது - வீரபத்திரனாகச் சிவபிரான் தக்கன் யாகத்தில் மற்ற தேவர்களோடு வந்திருந்த சூரியனின் பற்களைத் தகர்த்ததாகக் கூறப்படும் வரலாறு. 'சூரியனார் தொண்டை வாயினில் பற்களை, வாரி நெரித்தவா உந்தீபற' (திருவாசகம் - திருவுந்தி - 15) என்றது காண்க. |