| 4670. | 'முறையுடை எம்பியார் முடிந்தவா' எனாப் பறையிடு நெஞ்சினன், பதைக்கும் மேனியன், இறையுடைக் குலிசவேல் எறிதலால், முனம் சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்; |
முறையுடை எம்பியார் முடிந்த ஆ -நீதிமுறையைத் தனக்கு உரிமையாகவுடைய என் தம்பி சடாயு இறந்தவாறு என்னே!எனா -என்று; பறை இடு நெஞ்சினன் -பறையடிப்பது போலத்துடிக்கின்ற நெஞ்சையுடையவனும்;பதைக்கும் மேனியன் -தவித்துத் துடிக்கும் உடம்பையுடையவனும்;இறையுடைக் குலிசம் வேல் எறிதலால் - தேவேந்திரன் தன் வச்சிரப் படையை வீசியெறிந்ததால்;முனம் சிறை அறும் மலை என -முற்காலத்தில் சிறகுகள் அறுபட்டுப்போன மலையைப் போல; செல்லும் செய்கையான் -செல்லும் செயலையுடையவனானான். முற்காலத்தில் மலைகள் இறகுள்ளனவாயிருந்து பறந்த மக்களின்மேல் விழுந்து அழித்ததால், இந்திரன் அவற்றின் சிறகுகளை அரிந்தான் என்பது புராணக் கதை. சிறகுகள் அறுபட்ட மலை சிறகுகள் கரிந்துவிட்ட சம்பாதிக்கு ஏற்ற உவமையாம். எம்பியார் - பால்வழுவமைதி (பாசத்தால் வந்தது); தம்பி இளையவனாதலால் எம்பி என்று இருப்பது முறை; 'ஆர் என்ற மரியாதைப் பன்மை விகுதி சேர்த்து வழு; தம்பியை நினைத்த பாசத்தால் எம்பியார் என அமைந்தது. 23 | 4671. | 'மிடலுடை எம்பியை வீட்டும் வெஞ் சினப் படையுளர் ஆயினார்' பாரில் யார்?' எனா, உடலினை வழிந்து போய், உவரி நீர் உக, கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்; |
மிடலுடை எம்பியை -வலிமையுடைய என்தம்பியை;வீட்டும் - அழிக்கக் கூடிய;வெஞ்சினப் படையுளர் ஆயினார் -கொடிய கோபத்தோடு தாக்கும் படைக்கலங்களைக் கொண்டவர்;பாரில் யார்? -இந்த உலகத்தில் எவர் உள்ளனர்? எனா -என்று சொல்லி வருந்தி;உடலினை வழிந்துபோய் -உடம்பிலிருந்து கீழே விழுந்துபோய்;உவரி நீர் உக - கடலில் சேருமாறு;கடலினைப் புரை உறும் அருவிக் கண்ணினான் - அந்தப் பெரிய கடலைப் போல நீர்ப்பெருக்குடைய கண் களையுடையவனும். தன் அன்பான தம்பியின் மரணத்தை நினைந்து சம்பாதி கடல்போலக் கண்ணீரைப் பெருக்கினான் என்பது. உடலினை: உருபு மயக்கம். 24 | 4672. | உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான்; |
|