(அனுமன் சம்பாதியை மேலும் நோக்கி) வெங்கதம் வீசிய மனத்தன் - கொடிய கோபத்தை நீக்கிய மனத்தையுடையவனும் ;விம்மலன் - (துக்கத்தால்) பொருமுகின்றவனும்;பொங்கிய சோரி நீர் பொழியும் - பொங்கும் மழைபோல நீரைச் சொரிகின்ற;கண்ணினன் - கண்களையுடையவனுமாயிருக்கின்றான் (ஆதலால், இவன்);சங்கையில் சழக்கு இலன் -மனத்திலே சிறிதும் குற்றம் இல்லாதவன்;என்னும் தன்மையை - என்பதை;இங்கித வகையினால் -முகத்தின் குறிப்புகளினால்;எய்த நோக்கினான் -நன்றாக அறிந்து கொண்டான். அனுமன், பிறர் முகக் குறிப்பறிந்து உண்மையையுணர்பவனாதலால், சீற்றமில்லாமலும், துயரத்தால கண்ணீரைப் பெருக்கியும் வருகின்ற சம்பாதியைக் கண்டு அவன் குற்றமறறவன் என்பதைத் தெளிந்தான் என்பது. இங்கித வகை: குறிப்பால் உணருந் தன்மை. சங்கை: மனம்; சழக்கு: குற்றம். 28 சடாயுவைக் கொன்றவர் யார் எனச் சம்பாதி வினவுதல் | 4676. | நோக்கினன், நின்றனன், நுணங்கு கேள்வியான், வாக்கினால் ஒரு மொழி வழங்குறாதமுன், 'தாக்க அருஞ் சடாயுவைத் தருக்கினால் உயிர் நீக்கினர் யார்? அது நிரப்புவீர்!' என்றான். |
நோக்கினன் நின்றனன் -(சம்பாதியின் வருகையை) நோக்கி எதிர் நின்றவனும்;நுணங்கு கேள்வியான் -நுட்பமான கல்வி கேள்விகளையுடையவனுமாகிய அனுமன்;வாக்கினால் ஒரு மொழி -தன் வாயினால் ஒரு சொல்;வழங்குறாதமுன் -சொல்வதற்கு முன்னமே (சம்பாதி); தாக்க அருஞ் சடாயுவை -யாரும் எதிர்த்துப் போர் செய்ய முடியாத வலிமையிடைய சடாயுவை;தருக்கினால் -சூரத்தனத்தால்;உயிர் நீக்கினர் யார் -உயிரைப் போக்கியவர் யார்? அது நிரப்புவீர் -அதை விரிவாக எடுத்துக் கூறுங்கள்;என்றான் -என்று கேட்டுக் கொண்டான். நிரப்புவீர்: அனுமன் ஒருவனை உயர்வு கருதிப் பன்மையில் கூறியது என்றும், அங்கிருந்த மற்ற வானர வீரர்களை உளப்படுத்தியது என்றும் கொள்ளலாம். நிரப்புதல்: குறையின்றி முழுவதும் கூறல். 29 சம்பாதி தன் வரலாறு உரைத்தல் | 4677. | 'உன்னை நீ உள்ளவாறு உரைப்பின், உற்றதைப் |
|