பக்கம் எண் :

676கிட்கிந்தா காண்டம்

4692.அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா, உயிர் ஒன்ற ஓவினான்,
பெற ஒண்ணாது ஓர் பேறு பெற்றவர்க்கு
இறவு என் ஆம்? இதின் இன்பம் யாவதோ?'

     எம்பி -என் தம்பியான சடாயு;அறம் அன்னானுடன் -அறக்
கடவுளான இராமபிரானோடு;அன்பினோடு உறவு உன்னா -அன்போடு
உறவு கொண்டாடி;உயிர் ஒன்ற ஓவினான் -(அவன்திறத்து) தன் உயிரையும்
மன நிறைவோடு விட்டான்;பெற ஒண்ணாதது -யாரும் அடையமுடியாத;
ஓர் பெற்றி -
ஒப்பற்ற பேற்றை;பெற்றவர்க்கு -அடைந்தவர்களுக்கு;இறவு
என் ஆம் -
இறப்பு என்பதுதான் என்ன இழப்பைத் தந்துவிடும்?இதின்
இன்பம் யாவதோ -
இப் பேற்றைக் காட்டிலும் சிறந்த இன்பம் அளிப்பது
வேறு என்ன?

     இராமபிரான் பொருட்டு உயிரைக் கொடுக்க நேர்ந்த இப்பேற்றுக்குமுன்
மரணமென்பது இழப்பே அன்று என்பது.

     தருமமே ஒரு வடிவெடுத்தாற்போல இருப்பதால் இராமனை
'அறமன்னான்' என்றான்.

     சடாயு தசரதனுக்குப் பல உதவிகள் செய்து அவனுக்கு உயிர்த்
தோழனாகி அவனினும் வயது முதிர்ந்த தமையன் முறையிலிருந்து அவன்
மக்களான இராமலக்குவரைத் தன் மக்களாக எண்ணி அன்பைப் பொழிந்தார்
என்பதுபற்றி 'அன்பினோடு உறவுன்னா' என்றார்.

     யாவதோ: ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்த வினா. இறவு: இறப்பு -
தொழிற்பெயர்.                                                 45

சம்பாதி நீர்க்கடன் செய்து வானரரை நோக்கி மொழிதல்

4693. என்று என்று ஏங்கி, இரங்கி, இன்புனல்
சென்று, அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின்,
வன் திண்தோள் வலி மாறு இலாதவன்
துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான்:   *

     என்று என்று ஏங்கி இரங்கி -என்று பலவாறு ஏக்கங் கொண்டு
புலம்பி;இன்புனல் சென்று -இனிய நீர்நிலைக்குச் சென்று;அங்கு ஆடுதல்
செய்து -
அதில் நீராடுதல் செய்து;தீர்ந்த பின் -முடித்த பிறகு;வல்
திண்தோள்வலி -
மிக்க திண்ணிய தோள் வலிமையில்;மாறு இலாதவன் -
ஒப்பற்றவனாகிய சம்பாதி;துன்றும் தாரவர்க்கு -அடர்த்தியான மாலையைத்
தரித்த வானர வீரர்களை நோக்கி;இன்ன சொல்லினான் -பின் வருமாறு
கூறலானான்.

     சம்பாதி ஒப்பற்ற வலிமையுடையவன் என்பதால் 'தோள்வலி
மாறிலாதவன்' என்றார்.

     என்று என்று - அடுக்கு, துன்பத்தின் மிகுதியைக் காட்டுவது.       46